’அம்மா வாழ்ந்த சமயத்திலேயே அவரை ‘குற்றவாளி, கைதி’ என திட்டி, அசிங்கப்படுத்திய ராமதாஸுடன் கூட்டணி வைத்த உங்களை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது.’ - பா.ம.க. கூட்டணியை அ.தி.மு.க. உறுதி செய்ததும் அந்த கட்சிக்குள்ளேயே எழுந்த சுரீர் விமர்சனம் இது. ஆனால் தலைமை நிர்வாகிகள் இதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை அப்போது. ஆனால் இப்போதோ ’உண்மையிலேயே அம்மாவின் ஆன்மாவுக்கு இது பிடிக்கலையோ?’ என்று பதறுவதாக தகவல்கள் வைரலாகின்றன. 

ஏன் இந்த பதற்றம்?... ஜாதகம், ஜோதிடம், பரிகாரம், அமாவாசை, பெளர்ணமி, சூலம், சந்திராஸ்டமம், திதி, அஷ்டமி நவமி பாட்டமி, மேல்நோக்கு கீழ்நோக்கு...என்று எல்லாவற்றையும் பார்த்து அரசியல் செய்வதுதான் அ.தி.மு.க.வின் அடையாளம். ஜெயலலிதாவின் காலத்தில் துவங்கிய இந்த அடடா நாத்திக சம்பிரதாயம் இன்று வரை அங்கே தொட்டுத் தொடர்கிறது. இதை, அக்கட்சியின் இரு முதல்வர்கள் கம் ஒருங்கிணைப்பாளர்கள், அமைச்சர்களின் கைகள் மற்றும் நெற்றியில் உள்ள பல வண்ண கயிறுகள் மற்றும் திலகங்களைப் பார்த்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம். 

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்து, அக்கட்சிக்கு ஏழு தொகுதிகளை அள்ளிக் கொடுத்ததற்காக மிக கடுமையான உட்கட்சி விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது அ.தி.மு.க. தலைமை. அதிலும் தொண்டர்களோ....”அம்மாவை குற்றவாளி,  கைதி என்று திட்டித் திட்டி அவரது மனதை புண்படுத்தியவர் ராமதாஸ். அம்மாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவதையும் எதிர்த்தவர். அவருடன் கூட்டணி வைத்ததை அம்மாவின் ஆன்மா ஏற்காது, மன்னிக்காது.” என்று சாபம் விட்டனர். 

இந்த சாபம் ஏதோ பலித்துக் கொண்டிருப்பது போல உணர துவங்கியுள்ளதாம் அ.தி.மு.க.வின் தலைமை மற்றும் வி.ஐ.பி.க்கள் வட்டாரம். காரணம்...நேற்று காலையில் சாலை விபத்தில் அ.தி.மு.க.வின் எம்.பி.யான ராஜேந்திரன் மரணமடைந்தார். விழுப்புரம் தனி தொகுதி எம்.பி.யான இவர் முந்தாநாள் இரவில் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் விருந்தில் கலந்து கொண்டுவிட்டு, திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்திருக்கிறார். நேற்று காலையில் அங்கிருந்து சென்னைக்கு கிளம்பியவர் கொடூரமான சாலை விபத்தில் சிக்கி இறந்தார். விருந்துக்கு மறுநாள் நிகழ்ந்த இந்த அசம்பாவிதத்தை எண்ணி அ.தி.மு.க. தலைமை பெரும் வருத்தமடைந்தது.  

அதற்குள் இன்று காலை அடுத்த எம்.பி. விபத்தில் சிக்கியிருக்கிறார். அவர் கள்ளக்குறிச்சி எம்.பி.யான காமராஜ். சேலத்தில் நடைபெறும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தனியாக காரை ஓட்டிக் கொண்டு வந்தவர் இப்படி திடீரென விபத்தில் சிக்கினார். கார் தலைகீழாக புரண்டுவிட்டது. ஆனால் நல்ல வேளையாக கைகளில் மட்டும் காயத்துடன் தப்பினார் எம்.பி.  

இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாள். தேர்தல் நெருங்குவதால் இந்த பிறந்தநாளை பெரும் கொண்டாட்டத்துடன் அணுக நினைத்த அ.தி.மு.க.வுக்கு நேற்று எம்.பி.யின் மறைவும், இன்று நடந்த விபத்தும் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் தந்துள்ளன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தொண்டர்கள் சொன்னது போல் ‘அம்மாவின் ஆன்மாவுக்கு நமது பா.ம.க. கூட்டணி பிடிக்கவில்லையோ?’ என்று அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் அலறுகிறார்களாம். தேவையில்லாத சூழலை உண்டாக்கிவிட்டோமோ? என்று குழம்புகிறார்களாம். 

இந்த தகவல் பா.ம.க.வின் தலைமை வட்டாரத்துக்கு போக, அவர்கள் ஷாக்கடித்து உட்கார்ந்திருப்பதாக தகவல். அடுத்தடுத்த விபத்துகள், மரணம், ரத்தம் என்று அ.தி.மு.க.வை கலக்குகிறது இந்த விவகாரம். கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் தொடர் விபத்துக்களின் சிக்கினர். இதில் முதல் குற்றவாளியான கனகராஜ் கோரமாய் இறந்தார், ரெண்டாவது குற்றவாளியான சயன் செத்துப் பிழைத்தார். இவரது மனைவியும், சிறு மகளும் அநியாயமாய் உயிரிழந்தது நினைவிருக்கலாம். 

அந்த விஷயம் இப்போது அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளின் மனதில் நிழலாடி பாடாய்ப்படுத்துகிறதாம். தன் வீட்டில் கொள்ளையடித்தவர்களில் முக்கியமானவர்களை ஜெயின் ஆன்மா தண்டித்ததாகவே அந்த விஷயம் பார்க்கப்பட்டது. அது போலவே பா.ம.க. பெல்ட்டில் நடக்கும் இந்த விபத்துகளும் பார்க்கப்படுகின்றன. கடவுளே!