அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் தேர்தல் முடிவை பொறுத்து திமுக மற்றும் அமமுக கட்சிக்கு செல்லப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி மற்றும் துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி.தினகரனும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தல் என்பது தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்லாமல் அந்தக் கட்சியின் அமைச்சர்கள் முதல் கிளைக்கழகச் செயலாளர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் இறங்கி உள்ள நிலையில் அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற தகவல் பரவி வருகிறது. 

இதுதொடர்பாக அதிமுகவினரிடம் விசாரித்த போது ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தும் அவரது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி தர முடியவில்லை. மேலும் தன் மகனுக்கு சீட் வாங்க ஆர்வம் காட்டிய ஓபிஎஸ் அவருக்கு ஆதரவாக வந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு காட்டவில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தனர். 

இந்நிலையில் அதிமுகவிற்கு இந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் எவ்வளவு முக்கியத்துவம் என்பதை அறிந்தும் பிரச்சாரத்தில் அதிருப்தியாளர்கள் சற்று ஒதுங்கியே இருந்து வருகின்றனர். இதனையடுத்து தேர்தல் முடிவை பொறுத்து அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு திமுக மற்றும் தினகரன் கட்சிக்கு தாவப்போகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.