TN Assembly 2023 : உப்புச் சப்பில்லாத ஆளுநர் உரை இது.! திமுகவா? ஆளுநரா? ஓபிஎஸ் என்ன இப்படி சொல்லிட்டாரு.!!

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என தமிழ்நாட்டு மக்களை வீழ்ச்சியை நோக்கி திமுக அரசு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. - ஓ.பன்னீர்செல்வம்.

Aiadmk ops against talk about tn assembly governor speech

ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் உரை என்றால், வருங்காலத்தில் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு கனவு இருக்க வேண்டும். அந்தக் கனவை நனவாக்கும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும். ஒரு தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். 

ஆனால், இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை, திமுக ஆட்சியின் ஆளுமைத் திறமையின்மையை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. ஆளுநர் உரையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் அயராத உழைப்போடும், அக்கறையோடும் அரசை வழிநடத்தி உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மை நிலை என்னவென்றால், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என தமிழ்நாட்டு மக்களை வீழ்ச்சியை நோக்கி திமுக அரசு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குறைந்தபட்சம் 3,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், 1,000 ரூபாய் வழங்க இருப்பதை ஆளுநர் உரையில் பெரிய சாதனை போல் குறிப்பிடுவது நகைப்புக்குரியதாக உள்ளது. சுனாமி ஆழிப்பேரலையையும், மிகப் பெரிய வெள்ளத்தையும் திறம்பட சமாளித்து தமிழ்நாட்டின் நிர்வாகத்தை உலகப் பிரபலம் அடையச் செய்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. புயலின் தாக்கமும், மழையின் அளவும் வெகு குறைவாக இருந்த நிலையில், அதை ஒரு சாதனை போல் ஆளுநர் உரையில் இடம் பெறச் செய்திருப்பது கேலிக்கூத்தாக உள்ளது.

Aiadmk ops against talk about tn assembly governor speech

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

ஆளுநர் உரை

ஆளுநர் உரையில், பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், வெறும் மூன்று ரூபாய் உயர்வு என்பது ஏமாற்றமளிக்கும் செயல். இது தவிர, ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தி, தயிர், நெய், வெண்யெய், ஐஸ்க்ரீம் வகைகள், இனிப்பு வகைகள் என அனைத்து ஆவின் பொருட்களின் விலையை பன்மடங்கு உயர்த்தி, தமிழ்நாட்டு மக்களை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ள அரசாக திமுக அரசு விளங்குகிறது.

திமுக அரசின் திட்டங்கள்

“மக்களைத் தேடி மருத்துவம்” என்ற முன்னோடித் திட்டத்தை இந்த அரசு தொடங்கியுள்ளதாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனையை நாடினாலே மருத்துவம் இல்லை என்ற நிலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்து ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டு இருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. கரோனா தொற்று குறித்து குறிப்பிடுகையில், மாநிலத்தில் போதிய மருத்துவக் கட்டமைப்புகளைத் தயார் நிலையில் வைத்து, எதிர்வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மருத்துவக் கட்டமைப்பு என்பது போதிய உபகரணங்கள், மருந்துகள், மாத்திரைகள் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும். கரோனா தொற்றின்போது நியமனம் செய்யப்பட்ட 2,500 செவிலியர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்ட நிலையில், முந்தைய திமுக அரசின்போது பிறப்பிக்கப்பட்ட பதவி மற்றும் ஊதிய உயர்வு ஆணையை நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்ற நிலையில், அவர்கள்மீது பழிவாங்கும் நடவடிக்கையை அரசு எடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், எதிர்வரக்கூடிய சவால்களை சமாளிக்கத் தேவையான அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக கூறுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.

நீட் தேர்வு ரத்து

திமுக ஆட்சிக்கு வந்தால் ‘நீட் தேர்வு ரத்து’ என்ற வாக்குறுதி மேடைக்கு மேடை பேசப்பட்டது. ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டிருப்பதும், இதற்கான ஒப்புதலை விரைந்து வழங்க இந்த அரசுவலியுறுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டு இருப்பதும் வருத்தமளிக்கும் செயல் ஆகும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறும் வகையில் எந்த மாதிரியான அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து ஆளுநர் உரையில் ஏதும் குறிப்பிடாததிலிருந்து, இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் முதல்வர் மு.க. ஸ்டாலின் மனதிலேயே இருப்பதைத் தான் காட்டுகிறது. 

Aiadmk ops against talk about tn assembly governor speech

திமுகவுக்கு அக்கறை இல்லை

இந்த வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவிற்கு அக்கறை இல்லை என்பதும், ஆட்சிக் கட்டிலில் அமருவதற்காக அளிக்கப்பட்ட பொய்யான பல வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்பதும் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘இல்லம் தேடிக் கல்வி திட்டம்’ குறித்து பெருமையாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி தேடிச் சென்றாலே கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாத அளவிற்கு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்ற நிலையில், ‘இல்லம் தேடிக் கல்வி’ என்று கூறுவது வியப்பாக இருக்கிறது. ஏதோ பெயரளவிற்கு இந்தத் திட்டம் இருக்கிறதே தவிர, சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்பதுதான் எல்லோரின் கருத்தாக இருக்கிறது.

தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக ஆரம்பிக்கப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டத்தைப் பற்றியும், ஓலிம்பியாட் போட்டியை நடத்தியது பற்றியும், நடைமுறையில் உள்ள காலை உணவுத் திட்டம் பற்றியும் இந்த ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் பழங்கதை பேசப்பட்டு இருக்கிறதே தவிர, புதிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இந்த ஆளுநர் உரையில் ஒரு திட்டமும் இல்லை. இந்த ஆளுநர் உரையில், 2 லட்சத்து 23 ஆயிரத்து 210 கோடி ரூபாய் முதலீடும், 3 லட்சத்து 44 ஆயிரத்து 150 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..தமிழகத்தின் தலைமகன் பொய் சொல்ல முடியுமா? எல்லாமே அவங்க நாடகம்.! திமுகவை வெளுத்து வாங்கிய பாஜக அண்ணாமலை

சட்டசபை கூட்டத்தொடர்

அதே சமயத்தில், காலியாகவுள்ள கிட்டத்தட்ட 5 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவது குறித்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பது இளைஞர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அத்திக்கடவு-அவினாசித் திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது என்று 21-06-2021 அன்று வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022-203 ஆம் ஆண்டிற்கான நீர்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் 94 விழுக்காடு பணிகள் முடிவுற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆளுநர் உரையில் முடிவடையும் தருவாயில் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதே சமயத்தில், காலக்கெடு ஏதும் குறிப்பிடப்படவில்லை. இது அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு. மகளிர் அனைவருக்கும் கட்டணமில்லாப் பயணம் குறித்து இந்த ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. உண்மைநிலை என்னவென்றால், முன் பக்கமும், பின் பக்கமும் இளஞ் சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட கட்டணமில்லாப் பேருந்துகளுக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மகளிர் தெரிவிக்கின்றனர். அமைச்சரின் பேச்சிற்குப் பிறகு கட்டணமில்லாப் பயணத்தையே மகளிர் வெறுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Aiadmk ops against talk about tn assembly governor speech

முதல்வர் ஸ்டாலின்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்தோ, 70 வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்குவது குறித்தோ, அகவிலைப்படி உயர்வை காலதாமதமின்றி உடனுக்குடன் வழங்குவது குறித்தோ ஆளுநர் உரையில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக, அகவிலைப்படி உயர்வினை ஆறு மாத காலம் தாழ்த்தி கொடுத்தது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால், அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளம், ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வினால் ஏற்படக்கூடிய செலவினம் ஆகியவை ஆளுநர் உரையில் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

தமிழ்நாடு

இந்த ஆளுநர் உரையில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், இதனை ஆளுநர் அவர்களே படிக்காமல் விட்டுவிட்டார். தமிழ்நாட்டில் நடைபெறும் வெடிகுண்டு கலாச்சாரம், போதைக் கும்பலின் ஊடுருவல், அன்றாடம் நடைபெறும் கொலைகள், கொள்ளைகள் ஆகியவற்றின் அடிப்படையில், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழவில்லை என்ற முடிவுக்கு ஆளுநர் வந்துவிட்டார் என்றுதான் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பொதுமக்களின்மீது அக்கறை இல்லாத, இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கக் கூடிய, வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு வழிவகுக்கின்ற, வாக்குறுதிகளுக்கு செயல் வடிவம் கொடுக்காத உப்புச் சப்பில்லாத உரையாக இந்த ஆளுநர் உரை விளங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..கமிஷன்! கலெக்‌ஷன்! கரப்ஷன்! இது திமுகவின் பாதை மாறா பயணம்.. திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios