திமுக, அதிமுகவிடம் உறவு வேண்டும் என்று விரும்பும் கட்சிகள், நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது உதவி செய்தார்களா என்று அதிமுக மூத்தத் தலைவரும் மக்களவை சபாநாயகருமான தம்பிதுரை கூறியுள்ளார்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேடசந்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தம்பிதுரை. அப்போது அவர் கூறுகையில், “ நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களின் சஸ்பெண்ட் ஆர்டரை ரத்து செய்ய வேண்டுமென்று சபாநாயகரிடம் நான் கோரிக்கை விடுத்தேன். காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், கம்யூனிஸ்ட், அதேபோல எங்களிடம் உறவு வேண்டும், உறவு வேண்டும் என்று சொல்கிறார்களே பாஜக போன்ற கட்சிகளும், ஏற்கனவே உறவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் கட்சிகளும் ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. 

ஒரு உறுப்பினர்கூட எழுந்து, திமுக, அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததை விலக்கிக் கொள்ள வேண்டும் என சபாநாயகரை வலியுறுத்தவில்லை.  பா.ஜ.க. உறுப்பினர்களும் ஒருவர்கூட கேட்கவில்லை. இது எனக்கு மனவருத்தத்தை அளிக்கிறது. நான் ஏதும் பேசினால், தவறாக பேசுவதாக நினைக்கிறார்கள். 

எங்கள் உதவியை மட்டும் நாடிக்கொண்டு, அதேநேரத்தில் உறவுக்கும் கைகொடுத்தால்தானே எங்களுக்கு நன்றாக இருக்கும். அந்த நிலைமை அவையில் இல்லாததை அன்று பார்த்தேன். இரு தினங்கள் நான் வேதனையில் இருந்தேன். அதேசமயம்  பல நேரங்களில் பாஜகவின் வேண்டுகோளை ஏற்று, அவர்களுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது” என்று தம்பிதுரை மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.