Asianet News Tamil

தள்ளிவைக்கப்பட்ட தம்பிதுரை... அதிமுகவை அடக்கியாளும் டெல்லி அட்ராசிட்டி!

இப்படியொரு நிலையை கனவில் கூட நினைக்க முடியாத டெல்லி லாபி இப்போ இறங்கி அட்ராசிட்டி நடத்துது. இதை கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய சூழலில் எங்களை மாதிரி நிர்வாகிகள் இருப்பது கொடுமை.” என்கிறார்கள். அம்மா! நடத்திய அ.தி.மு.க.வா இது

aiadmk mp thambidurai...Delhi Audrasity
Author
Tamil Nadu, First Published Jan 20, 2019, 11:24 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

காலை சுற்றிய பி.ஜே.பி. இப்போது கழுத்தையே நெரிக்க துவங்கிவிட்டது! என்று குமுற துவங்கிவிட்டனர் அ.தி.மு.க.வின் நடுநிலை சீனியர்கள். 
என்ன பிரச்னை?....எல்லாம் தம்பிதுரை தள்ளிவைக்கப்பட்டுவிட்ட விவகாரம்தான். குமுறும் சீனியர்களே குறைகளை விவரிக்கிறார்கள்...

“எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து எங்க கட்சியில் கோலோச்சுகிற புள்ளி தம்பிதுரை. கட்சியில அவர் ஒண்ணும் ஜனரஞ்சகமான தலைவர் கிடையாது. அவருக்குன்னு ஒரு ஆதரவு கூட்டம், அவரால் வளர்ந்த நிர்வாகிகள் அப்படின்னு யாரையும் சொல்ல முடியாது. வெளிப்படையான சுயநல நிர்வாகிதான். ஆனாலும் தலைமை அவரை தொடர்ந்து லைம்லைட்டில் வெச்சிருக்க காரணம், நல்ல அரசியல் சாணக்கியர். அம்மா காலத்தில் எங்க கட்சியின் டெல்லி முகமாகவே விளங்கினார். 

தேசிய அளவில் அ.தி.மு.க.வின் அரசியல் பேசப்படுவதற்கான மிக முக்கிய கருவியாக இருந்தார். அம்மாவுடைய குறிக்கோள் என்னான்னு கணிச்சு, அதை மிக தெளிவாக டெல்லியில் செய்து முடிப்பார். அந்த வகையில் எங்க கட்சிக்கு தம்பிதுரை மிக அவசியம். ஆனால் இன்னைக்கு பி.ஜே.பி.யின் பேச்சை கேட்டுட்டு அவரை கிட்டத்தட்ட கட்சியிலிருந்து ஒதுக்கியே வெச்சுடுச்சு எங்க தலைமை. காரணம், கடந்த சில மாதங்களாகவே பி.ஜே.பி.க்கு எதிராக மிக உக்கிரமாக அவர் குரல் கொடுத்துட்டு இருந்ததுதான். 

அதிலும் தங்களோடு கூட்டணி வெச்சே ஆகணும், தாங்கள் கேட்கிற எண்ணிக்கையில் சீட்டையும் மற்றும் கேட்கிற தொகுதிகளையும் கொடுத்தே ஆகணும் அப்படின்னு பி.ஜே.பி. கடும் நெருக்கடி கொடுக்குது. இதை எங்களோட இரு ஒருங்கிணைப்பாளர்களாலேயும் வலுவா எதிர்க்க முடியலை. இந்த நேரத்துலதான் தம்பிதுரை மிக மிக வலுவாக பி.ஜே.பி.க்கு எதிராக குரல் கொடுத்துட்டே இருந்தார். எங்கள் தலைமை வழியாக அவரை ‘அமைதியா இருங்க.’ன்னு சொல்லமா மிரட்டிப் பார்த்தும் வேலைக்கு ஆகலை. அதிலும் கடந்த வாரமெல்லாம் பி.ஜே.பி.யை பீஸ் பீஸா கிழிச்சுட்டார். இதை டெல்லியின் காதுகளுக்கு தமிழக பி.ஜே.பி. தலைவர்கள் கூடுதலா பத்து பிட்டு சேர்த்துப் போட்டு மொழிமாற்றம் பண்ணி சொல்லிட்டாங்க.

 

விளைவு, ’தம்பிதுரையை தள்ளி வை’ அப்படின்னு டெல்லியிலிருந்து உத்தரவு வந்துட்டதா கடந்த ரெண்டு மூணு நாட்களாக கட்சிக்குள் சலசலப்பு. துவக்கத்துல இதை நாங்க நம்பலை. ஆனால், முந்தாநாள் தன் குடும்பத்தோடு கும்பகோணம் போனார் தம்பிதுரை. கோயில்களில் வழிபாடு நடத்தி, யாகம் செய்யுறதுக்காக அங்கே போயிருந்தார். கட்சியின் சீனியர் தலைவர், எம்.பி. மற்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் அப்படின்னு மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிற அவரை எங்க கட்சியின் கும்பகோணம் நிர்வாகிகள் சென்று வரவேற்கவுமில்லை, அவர் வந்திருப்பதை தெரிஞ்ச மாதிரி கூட காட்டிக்கலை.

 

இதிலிருந்துதான், தம்பிதுரையை தள்ளி வைக்கச் சொல்லி டெல்லி போட்ட உத்தரவு உண்மைதான்னு புரியுது எங்களுக்கு. இந்த சூழ்நிலையானது எங்க கட்சிக்கு நிகழ்ந்திருக்கும் பெரும் அவமானம். தன் கட்சியில் உள்ள வி.ஐ.பி. அதிருப்தியாளர்களை சமாதானம் செய்ய முடியாத மோடியும், அமித்ஷாவும், எங்க கட்சியின் உள் விவகாரத்துக்குள் நுழைந்து ஒரு வி.வி.ஐ.பி.யை இப்படி தள்ளிவைக்கப்படுமளவுக்கு ஆதிக்கம் செலுத்துறது பெரிய அவலம். அம்மா இருந்திருந்தால் இப்படியொரு நிலையை கனவில் கூட நினைக்க முடியாத டெல்லி லாபி இப்போ இறங்கி அட்ராசிட்டி நடத்துது. இதை கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய சூழலில் எங்களை மாதிரி நிர்வாகிகள் இருப்பது கொடுமை.” என்கிறார்கள். அம்மா! நடத்திய அ.தி.மு.க.வா இது?

Follow Us:
Download App:
  • android
  • ios