துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்ட எம்.பி. டெல்லியில் திமுக எம்.பி. கனிமொழியைச் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் மோடி அரசின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது. கடைசி கூட்டத் தொடர் என்பதால், பெரும்பாலான எம்.பி.க்கள் பங்கேற்றார்கள். தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. எம்.பி.க்களும் கடைசி பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டம் முடிந்த பிறகு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், தி.மு.க. எம்.பி. கனிமொழியை திடீரென சந்தித்து பேசினார். அவரோடு சேர்ந்து தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும் சந்தித்தனர். பிறகு கனிமொழியோடு அவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். 

இந்தப் புகைப்படத்தை அ.தி.மு.க. எம்.பி. பார்த்திபன் ஃபேஸ்புக், வாட்ஸ்சப்பில் பகிர்ந்தார். இதனால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது அவருக்கு ஆதரவு அளித்தவர் பார்த்திபன். தேனி தொகுதியில் போட்டியிட பார்த்திபன் மீண்டும் ஆர்வம் காட்டிவருகிறார். ஆனால், துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வத்தின் மகன் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றதால், பார்த்திபனுக்கு மீண்டும் சீட்டு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தச் சந்திப்பு நடந்ததால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக தேனி மாவட்ட நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, “நாடாளுமன்ற மன்ற கடைசிக் கூட்டம் என்பதால், குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றி பார்க்கப் போனோம். அப்போது அங்கே கனிமொழியும் வந்திருந்தார்.

அதனால், அவருடன் பேசிவிட்டு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கனிமொழியிடம் மட்டுமல்ல, பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணிய சுவாமியுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மரியாதை நிமித்தமான சந்திப்புதான் இது” என்று முற்றுப்புள்ளி வைத்தார்கள்.