ராமநாதபுரத்தில் தன்னுடைய வீட்டுக்கு அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி ஆளுகட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏவுமான மணிகண்டன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சில வாரங்களுக்கு முன் வண்டிக்கார தெருவில் பாதாளச் சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கியது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழையால், கழிவுநீர் வீடுகளுக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் கழிவுநீரை அகற்றவும், சாக்கடை உடைப்பை சரி செய்யக் கோரியும் நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், அந்த பகுதி முழுவதும் கடும் தூர்நாற்றம் வீசியது. 

கழிவுநீரை அகற்றாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏவுமான மணிகண்டன் நேற்று காலை ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். நேற்று காலை வண்டிக்கார தெருவில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த நகராட்சியினர் கழிவுநீர் அகற்றும் வாகனம் மூலம்  தண்ணீரை அகற்றினர்.  மேலும் அப்பகுதி முழுவதும் பிளீச்சிங் பவுடர் தெளித்தனர். இதனால் 2 மணி நேரமாக எம்எல்ஏ நடத்திய போராட்டம் முடிவிற்கு வந்தது.

ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவரே தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏவுக்கு இந்த நிலைமை என்றால் சாதாரண மக்கள் நிலை என்ன என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.