மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள், காவல்துறையினரை தொடர்ந்து அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மாணிக்கத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல், மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை தமிழகத்தில் 29 எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 14 அதிமுக, 12 திமுக, ஒரு காங்கிரஸ்  எம்எல்ஏக்கள் அடங்குவர். மேலும், 3 நாடாளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.