AIADMK Mithrayyan charged that Dinakarans team was worn on wearing AIADMK

அதிமுக வேட்டியை அணிந்துகொண்டு தினகரன் அணயினர் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுக எம்பி மைத்ரேயன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் கூறுவதுபோல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். 

இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொப்பி சின்னம் மீண்டும் கிடைக்காததால் டிடிவி தினகரன் பிரஷர் குக்கர் சின்னத்துக்கு வாக்குகேட்டு பிரசாரம் செய்து வருகிறார்.

இதனிடையே ஆர்.கே.நகரில் கடும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆர்.கே.நகரில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது.

ஆனால் அதிமுகவை சேர்ந்த மதுசூதனனும் டிடிவியும் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே திமுக இரு தரப்பின் மீதும் புகார்களை அள்ளி வீசுகிறது. இதுவரை ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்தமுறை ஓட்டுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது ஓட்டுக்கு ரூ. 6000 வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே பேசிய பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தேர்தலை முறையாக நடத்த முடியாவிட்டால் ரத்து செய்துவிட்டு போங்கள் என பொரிந்து தள்ளினார். 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்பி மைத்ரேயன் அதிமுக வேட்டியை அணிந்துகொண்டு தினகரன் அணயினர் பணப்பட்டுவாடா செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழிசை சவுந்தரராஜன் கூறுவதுபோல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.