கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தால் தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

சென்னை முன்னாள் மேயர் சிவராஜின் 128-வது பிறந்தாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பாண்டவர்கள் வழியில் அதிமுக அரசு மக்களுக்கான ஆட்சியை கொடுத்து வருகிறது. 

இதுவரை குரூப் 2 தேர்வில் ஆங்கிலம் படித்தவர்கள் 60 சதவீதமும், தமிழ் படித்தவர்கள் 40 சதவீதம் மட்டும் தேர்ச்சி பெற்றள்ளனர். முந்தைய பாடத்திட்டத்தில் பொது அறிவு என்ற ஒரு பிரிவு இருந்ததாகக் கூறிய அவர், அதனை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதுவதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில், ஆங்கிலத்தை தேர்வு செய்து அதிக அளவில் தேர்வாகிச் சென்றதாகத் தெரிவித்தார். ஆனால் 300 மதிப்பெண்களுக்கான முதல் நிலைத் தேர்வில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். டி.என்.பி.எஸ்.இ.ன் அறிக்கையை மேலோட்டமாக படித்துவிட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

மேலும் பேசிய அவர், விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றிபெறும். யார் உற்றவர், யார் அற்றவர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது என்பது சிம்ம சொப்பனம்தான். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தால்தான் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்தார்.