திமுக ஆட்சிக்கு வந்தால்தானே ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கையாக ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து, தண்டனை அளிக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியிருப்பது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ''முதலில் அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை. வராதவர்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. 

அவரது மரணத்தில் மர்மம் இருந்திருந்தால் அதற்கு சசிகலாவின் குடும்பம் தான் பதில் சொல்ல வேண்டும். இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றது தொடர்பாக பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள். இதற்கும் அந்த குடும்பம் தான் பதில் சொல்ல வேண்டும் வென்றார். எங்களை பொறுத்தவரை தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்பதைப்போல் நாங்கள் ஜெயலலிதாவை பின்பற்றி வந்தோம். ஆனால் ஸ்டாலின் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதைப்போல் அவரது தந்தை கருணாநிதி சொன்னதை கேட்டாரா? கூடா நட்பு கேடாய் முடியும் என்பதைப்போல் தான் அவர்கள் நடந்துள்ளனர். 

அன்றைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி, நீங்கள் சரியாகி வந்தால் ஆட்சியை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்றார். ஆனால் மக்கள் கருணாநிதிக்கு ஆதரவாக இருக்கவில்லை. திமுகவைப் புறக்கணித்த அவர்கள், அதிமுகவுக்கு மகத்தான வெற்றியை அளித்தனர்.

அந்த வகையில், அப்பா எடுத்த அதே ஆயுதத்தை மகன் (ஸ்டாலின்) இன்றைக்குக் கையில் எடுத்திருக்கிறார். அது நடக்காது. ஸ்டாலின் அவரின் கட்சிக் கொள்கைகளைச் சொல்லலாம், அதன் தலைவர் பற்றிப் பேசலாம். ஜெயலலிதா பற்றிப் பேச ஸ்டாலினுக்கு என்ன உரிமை இருக்கிறது? அவரின் மரணத்துக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி, கடுமையான தண்டனை வழங்கப்படும். அதற்காகத்தான் விசாரணை ஆணையமே அமைக்கப்பட்டிருகிறது'' என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.