அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும், கழகப் பணிகளை விரிவுபடுத்தும் வகையிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் திருப்பூர் மாநகர்,  திருப்பூர் புறநகர், புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் கீழ்க்கண்டவாறு புதிய மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு பின்வருமாறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் என்பதையும், மாவட்ட கழக செயலாளர்களாக கீழ்க் கண்டவர்கள் கீழ்காணும் மாவட்டங்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம்: 

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கயம் பகுதிகளை கொண்டு, திருப்பூர் மாநகர் மாவட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்திற்கு தமிழக சட்டமன்ற பேரவை துணைத் தலைவரும், தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உடுமலைப்பேட்டை, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளை கொண்டு, திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்திற்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தாராபுரம், மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளை கொண்டு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சி. மகேந்திரன் EX MP,அவர்கள் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கந்தர்வகோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, ஆலங்குடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமயம், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளை கொண்டு புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது இம்மாவட்டத்திற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே வைரமுத்து அவர்கள் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி,  விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய விருதுநகர் மேற்கு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்திற்கு பால்வளத் துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி அவர்கள் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டு விருதுநகர் கிழக்கு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு வெம்பக்கோட்டை ஒன்றிய கழக முன்னாள் செயலாளரும் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவருமான கே.ரவிச்சந்திரன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய அனைத்து பகுதிகளும் (ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகள் மற்றும் ஊராட்சி வார்டு, வட்டம்) தற்போது நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கழக செயலாளர்களின் கட்டுப்பாட்டில் இன்று முதல் செயல்படும். கழக உடன்பிறப்புகள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, கழகப் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். கழக மற்றும் சார்பு அமைப்புகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாக பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு... கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.