20 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அவர்களுடன் இணைந்து கொள்வதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் எங்களுக்கு எதிரி அதிமுக அல்ல திமுக தான் என்று கூறியுள்ளார். 

அதிமுக இரண்டு அணிகளாக உடைந்து தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது. அதே நேரம், தங்களது அணியில் இணையுமாறு, அதிமுகவும், அமமுகவும் மாறி, மாறி அழைப்பு விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- குறுகிய காலத்தில் தற்போது அமமுக அசுரவேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. ஆகையால் அதிமுகவும் அமமுகவும் பிரிந்து இருப்பதால் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் நிலை இருப்பதால் அதை பாஜக உணர்ந்து இரண்டு பேரும் இணைய வேண்டும் பேச்சு உலாவருகிறது. இப்போது இல்லை எப்போதுமே பாஜகவுடன் அ.ம.மு.க. கூட்டணி வைக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், நாங்கள் அதிமுகவிற்கு வருகிறோம், நாங்கள் வெற்றி பெற்றால் அதிமுகவினர், அமமுக-விற்கு வரட்டும் என்றும் கூறினார். அதிமுக தங்களுக்கு எதிரி அல்ல, என்றும் திமுக தான் எங்களுக்கு முதல் எதிரி என்றார். கலைஞர், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை டிடிவி தினகரன் மட்டுமே நிரப்ப முடியும் என்றும் அதிமுகவில் உள்ளவர்கள் திருந்தி அமமுக இணைந்தால் வரவேற்கிறேன். இப்போதுள்ள சூழலில் இடைதேர்தல் வைத்து அமமுக 20 தொகுதியிலும் வெற்றி பெற்ற பிறகு வராதீர்கள். மேலும் அதிமுகவில் உள்ள சில நிர்வாகிகள் மீதே எங்களுக்கு வருத்தம் உள்ளது என தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். 

முன்னதாக அதிமுகவில் இணையுமாறு அழைப்பு விடுத்த, அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அ.தி.மு.க.வில் இணைவதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து விடலாம் என்று தங்க தமிழ்ச்செல்வன் விமர்சனம் செய்துள்ளார்.