இடைத்தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் அதிமுக செய்தித் தொடர்பாளரும், எம்.எல்.ஏவுமான மார்கண்டேயன் கட்சியை விட்டு விலகியதோடு தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளதால் அதிமுக தோல்வி அடைவது உறுதி என்கிறார்கள் அப்பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள்.

 

விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனக்கு சீட் கிடைக்கும் என மார்க்கண்டேயன் அதீத நம்பிக்கையில் இருந்து வந்தார்.  ஆனால், அதிமுக தலைமை சின்னப்பனை வேட்பாளராக அறிவித்துள்ளது. மார்க்கண்டேயன், தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முநாதனின் தீவிர ஆதரவாளர். சின்னப்பன், வடக்கு மாவட்டச் செயலாளரும், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் ஆதரவாளர்.

மார்க்கண்டேயன் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் என எடப்பாடி பழனிசாமியிடம் கூறி தனது ஆதரவாளரான சின்னப்பனுக்கு கடம்பூர் ராஜூ சீட் வாங்கி கொடுத்துவிட்டார் எனக்கூறப்படுகிறது. சீட் கிடைக்காததால் விரக்தியடைந்த மார்கண்டேயன் கட்சியை விட்டு விலகி தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.   

இதுகுறித்து விளாத்திகுளம் அதிமுகவினர் கூறுகையில், ‘’சாதி ரீதியாக சின்னப்பனும், மார்க்கண்டேயனும் ஒரே சமூகத்தவர். மார்க்கண்டேயனின் அணுகுமுறை சின்னப்பனிடம் இருக்காது. ஒருவரிடம் சில நிமிடங்கள் மட்டுமே பேசினால் அவரை தன் வழிக்கு மார்கண்டேயன் கொண்டு வந்து விடுவார். பலருக்கும் உதவி செய்வார். இந்த தேர்தல் அதிமுக ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்கான முக்கியமான தேர்தல். ஆகையால் ஓவ்வொரு தொகுதியும் முக்கியம். மார்கண்டேயனை நிறுத்தி இருந்தால் நிச்சயம் வெற்றிபெற்று இருப்பார். மார்கண்டேயன் விளாத்திகுளம் பகுதியில் செல்வாக்கு பெற்றவர்’’ எனக் கூறுகின்றனர். 

விளாத்திகுளம் எப்போதுமே அதிமுக செல்வாக்கு நிறைந்த தொகுதி. கட்ந்த 2016ல் உமா மகேஸ்வரி போட்டியிட்டு வென்றார். அவர் டி.டி.வி அணிக்கு சென்றதால் எம்.எல்.ஏ பதவியை இழந்தார். 2011ல் மார்கண்டேயன் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். 2006ல் இப்போதுப் சீட் பெற்றுள்ள இதே சின்னப்பன் அதிமுகவில் நின்று வெற்றிபெற்றார். கடந்த 10 சட்டமன்ற தேர்தலில் இருமுறை மட்டுமே திமுக வென்றிருக்கிறது. அதிமுக 8 முறை வென்று இருக்கிறது. அதிமுகவில் ஏற்கெனவே வெற்றிபெற்றவர்தான் இந்த சின்னப்பன். அப்படியிருக்கையில் மார்கண்டேயனால் சின்னப்பனை எப்படி தோற்கடிக்க முடியும்? என்கிற கேள்விக்கு விடை. டி.டி.வி.தினகரன்.  

டி.டி.வி.தினகரன் தரப்பு மார்க்கண்டேயனை தங்களது பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் தான், விளாத்திகுளம் தொகுதியில் வேட்பாளரை அறிவிக்காமல் வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். அதனை உறுதி படுத்தும் வகையில் மார்கண்டேயன் பேச்சும் அமைந்துள்ளது. தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக ஒரே தலைமையின் கீழ் செயல்படும் என மார்கண்டேயன் கூறியதை கடந்து விட்டு செல்ல முடியாது. ஆக, டி.டி.வி.தினகரன் அணியில் இணைந்து மார்கண்டேயன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் விளாத்திகுளம் தொகுதியில் அதிமுகவும், திமுகவும் வெற்றிபெற முடியாது. அமமுக எளிதாக வெல்லும் என்கிறார்கள் அப்பகுதியினர்.