சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியும், போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் போட்டியிட உள்ளனர். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் என ஒருபுறமும், விருப்ப மனு தாக்கல், நேர்காணல், ஆலோசனை என மறுபுறமும் பிசியாக வேலை செய்து வருகின்றனர். அதிமுகவில் கடந்த மார்ச் 3ம் தேதி விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று எடப்பாடியாருக்கு ஐந்தாவது எண் ராசி என்பதால் ஐந்தாம் தேதி 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறார்.  அவரது ராசி எண் என்பதையும் தாண்டி, அறிவிக்கப்பட்டுள்ள 6 வேட்பாளர்கள் பட்டியலையும் உற்று நோக்கினால் ஓர் உண்மை புலனாகும். அறிவிக்கப்பட்டுள்ள 6 பேர் பட்டியலில், எங்கே தம்மை முக்குலத்தோர் இனம் சபித்து விடுமோ என்பதை நினைவில் கொண்டோ அல்லது ஒருங்கிணைப்பாளர் என்பதை மனதில் கொண்டோ ஓ.பி.எஸ் பெயர் அந்த லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது. (தலைமை ஒருங்கிணைப்பாளர்தான். ஆனால் அதிமுகவில் அவருக்கு எங்கே மரியாதை உண்டு..?)

அந்த லிஸ்ட் படி முக்குலத்தோரில் ஓ.பி.எஸ் போடி நாயக்கனூரிலும்., கவுண்டர்கள் சார்பாக முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், மீனவ சமுதாயம் சார்பாக ஜெயகுமார் ராயபுரம் தொகுதியில் போட்டியிடவும், விழுப்புரத்தில் வன்னியர்கள் சார்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் களமிறங்குவதாகவும், நாடார் சமுதாயத்தை சேர்ந்த எஸ்.பி.சண்முகநாதன் ஸ்ரீ வைகுண்டத்தில் போட்டியிட உள்ளதாகவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நிலக்கோட்டை சிட்டிங் எம்.எல்.ஏ தேன்மொழிக்கும் சீட் வழங்கப்பட்டு முதல் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது. என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். 

ஆனால், முதல் வேட்பாளர் பட்டியலில் 50 தொகுதிகளுக்கான வேட்பாளர்களாவது அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 பேரை சாதிய முக்கியத்துவம் கொடுத்து எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருப்பது அவரது சாதுர்யத்தைக் காட்டுவதாக மெச்சுகிறார்கள் அதிமுகவினர்.