பாஜகவின் அடிமையாய் மாறிபோன ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோருக்கு கொங்கு மண்டலம் மரண அடி கொடுக்கும் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒவ்வொரு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தி வருகிறார். இதன்படி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கான நேற்று ஈரோடு வந்த தினகரன், தாளவாடி, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் நின்றுகொண்டு மக்கள் ஆதரவைத் திரட்டினார். அப்போது கொங்கு மண்டத்தில் அதிமுகவுக்கு மரண அடி கிடைக்கும் என்று தினகரன் பேசினார். 

அவர் பேசிய பேச்சின் சாரம்சம்: “எடப்பாடி பழனிச்சாமி இந்தக் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். ஆனால், அவர் தன் சொந்த மக்களுக்கே கேடு செய்து வருகிறார். அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கியது முதலே கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை. அம்மா காலத்திலும் அந்த நிலைமை மாறாமல் அப்படியே இருந்தது. 

ஆனால், இப்போது நிலைமை அப்படியல்ல. எல்லாம் மாறிவிட்டது. அதற்குக் காரணம் எடப்பாடி நடத்தும் கம்பெனிதான். பா.ஜ.க.வின் அடிமையாய் மாறிவிட்ட எடப்பாடி, ஓ.பி.எஸுக்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மரண அடி கொடுக்க கொங்கு மக்கள் காத்திருக்கிறார்கள். தேர்தலுக்கு பின்பு எடப்பாடியின் ஆட்சி என்ற கம்பெனி தானாக கலைந்துவிடும்" என்று தினகரன் பேசினார்.