வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று சரித்திரம் படைக்கும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு தின நாளில் சாதித்துக் காட்டிய முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஆர்.பி உதயகுமார் தலைமையிலான அம்மா பேரவையின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதுரை திருமங்கலத்தில் அம்மா பேரவை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில்,  முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பப்ளிக் அஃபெர்ஸ் சென்டர் என்ற அரசு சாரா அமைப்பு இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை தரும் மாநிலங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை  வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் சிறந்த நிர்வாகத்தை தரும் பெரிய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக புள்ளி  விபரத்துடன் வெளியிட்டு பாராட்டியுள்ளது. 

தாய் தமிழ் நாட்டின் தலை சிறந்த மாநிலமாக உருவாக்கித் தந்து இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் தலை சிறந்த மாநிலமாக தாய்த் தமிழ்நாட்டை இரண்டாவது இடத்திற்கு உயர்த்தி  காட்டி, தலை சிறந்த மாநிலம் என்று போற்றிடும் வகையில் தமிழ்நாடு பிறந்தநாளில் சாதித்துக் காட்டிய சாதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கழக அம்மா பேரவை பொற்பாதம் பணிந்து கோடான கோடி நன்றி தெரிவித்துக்கொள்கிறது. இதற்கு துணையாக நிற்கும் கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த  அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இந்த சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி வருகின்ற  2021 சட்டமன்ற  தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி சரித்திரம் படைக்கும் என்றும் அம்மா பேரவை சார்பில் சூளுரை ஏற்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி உதயகுமார், இந்தியாவில் கொரோனா தொற்றில் சிறப்பாக பணியாற்றி நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில்  இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழக முதலமைச்சர் திகழ்கிறார் தமிழகத்தை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் முதலமைச்சரை பார்ட்டியிருப்பது ஒட்டு மொத்த இந்திய தேசமும் பாராட்டியதற்கு சமம் என்றார். மேலும் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று மக்களுக்காக உழைத்து வரும் முதலமைச்சருக்கும் அவருக்கு துணையாக இருக்கும் துணை முதலமைச்சருக்கும் வரும் தேர்தலில் வெற்றியை பரிசாக மக்கள் வழங்குவார்கள். அதே போல் திமுகவுக்கு வரும் தேர்தலில் தோல்வியே பரிசாக கிடைக்கும் எனவும் அவர் கூறினார் .