குற்றப்பரம்பரையா? குற்றப்பத்திரிகையா..? என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில், ‘’திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகை ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைக்கு பதிலாக அடுத்தவர் பிள்ளையின் புகைப்படத்தை போட்டு தங்களது அவசர புத்தியையும், ஆர்வக்கோளாறையும் அடுத்தவர் மீது பழிபோட்டு பிழைக்கிற அற்ப புத்தியையும் காட்டிய விவகாரத்தின் ஈரம் காய்வதற்குள் அடுத்ததொரு வில்லங்கத்தை அரங்கேற்றி இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். 

பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த சென்றவர் அங்கேயும் எழுதி கொடுக்கப்பட்ட துண்டு சீட்டை துல்லியமாக வாசிப்பதற்கு பதிலாக ’தேவர் இனத்தை குற்ற பத்திரிகையில் இருந்து நீக்க வேண்டும் என பசும்பொன் தேவர் போராடினார் என்று பிழையாக பேசி பெரும் அவமானத்தை சந்தித்திருக்கிறார். 

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை அடக்கியாண்ட காலத்தில் தேவர் சமுதாயத்துக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட கைரேகை சட்டம் எனப்படும் குற்றப் பரம்பரை சட்டத்தை நீக்கக்கோரி தன் ஆயுள் எல்லாம் அயராது போராடியவர் பசும்பொன் தேவர். இதனை பத்திரிக்கையாளர்களிடம் விவரிக்க முனைந்த ஸ்டாலின் குற்றப்பரம்பரை சட்டம் என்பதற்கு பதிலாக குற்றப்பத்திரிகை என்று பிழை பொருட்பட பேசி ஒரு சமூகத்தையே இழிவு செய்வது போன்ற இக்கட்டை உருவாக்கி இருக்கிறார். 

எப்போதாவது பிழையாக பேசுவது மனித இயல்பு. எப்போதுமே பிழையாகவே பேசுவது அது மனிதரின் பிறவி பிழை. அத்தகைய அம்சத்துக்கு தான் ஒரு சாலப் பொருத்தமானவர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் ஸ்டாலின். அனிதாவுக்கு சரிதா, ரேடாருக்கு ரோடார், நாட்டுப்பண் என்பது நாட்டுப்புற பாட்டு, சாகித்ய அகாடாமி என்பதற்கு பதிலாக சாதிய அகடாமி இன்னும் இன்னுமாக அவர் வாயில் இருந்து வந்து விழும் சொல் யாவும் மீம்ஸ்  கிரியேட்டர்களுக்கு பொக்கிஷங்கள் ஆகின்றன. 

என்ன செய்வது? எழுத்தாற்றல், பேச்சாற்றல் என கொடிகட்டி பறந்த திராவிட இயக்கத்தின் தொட்டிலான திமுக இன்று ஒரு தத்தி தலைவனின் புத்தி குறைவு பேச்சுகளால் காமெடி கூடமாகி விட்டது. காஞ்சி தலைவன் அமர்ந்து அலங்கரித்த ஆசனத்திற்கு கருணாநிதி மகன் என்கிற பிறப்பு சான்றிதழை மட்டுமே வைத்துக் கொண்டு ஜனநாயகத்துக்கு மாறாக தலைமை பதவியை அபகரித்துக் கொண்டால் இந்த இழிநிலை தானே நிகழும். ஐயோ பரிதாபம். ஆக. ஆக. ஆக...’’ என விமர்சித்துள்ளது.