திமுக மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி..'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிற்கும் தமிழக மக்களுக்கும் துரோகம் செய்தவர் என குற்றம் சாட்டியிருக்கிறார்.

சேலம் மாவட்டம் இருப்பாளியில் பனை தொழிலாளர்கள் மத்தியில் பேசிய திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி.., “தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசின் காலடியில் போட்டுவிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. ஏழை மாணவ மாணவியரின் மருத்துவ கனவை அடகு வைத்து விட்டார். அதிமுக தற்போது அமித்ஷா முன்னேற்ற கழகமாக மாறிவிட்டது. வெற்றி பெற்றவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள். அதிமுகவிற்கு துரோகம் செய்தவர் தான் பழனிசாமி. பச்சைத் துண்டை போட்டுக் கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்தவர் முதல்வர் பழனிசாமி. பச்சைத்துண்டை போட்டுக் கொண்டு விவசாயி போல் போஸ் கொடுக்கும் முதலமைச்சர் மத்திய அரசு கொண்டு வரும் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை வரவேற்கிறார்.

"நிவர்" புயலின் தாக்கம் குறைவாக இருந்ததால் பாதிப்பு அதிகளவில் இல்லை. புயலை எதிர்கொள்ள அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் தொழில் முதலீடு குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன்? அதிமுக ஆட்சியில் ஒரு வேலைவாய்ப்பு கூட உருவாக்கப்படவில்லை. சுய உதவிக்குழுக்கள் அழிவுப்பாதையில் செல்கின்றன. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீண்டும் உச்சத்தை தொடும். இந்த ஆட்சியில் பெண்களின் கல்வி கேள்விக்குறியாக மாறக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது” என அடுக்கிக்கொண்டே போனார்.