Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவுக்கு, மத்திய அரசை எதிர்க்க தைரியமில்லை; அதனால் திமுக-வை வம்பிழுக்கிறது - தங்கம் தென்னரசு சாடல்...

AIADMK has no courage to oppose central government so its oppose DMK thangam thennarasu
AIADMK has no courage to oppose central government so its oppose DMK thangam thennarasu
Author
First Published Apr 5, 2018, 7:38 AM IST


விருதுநகர்

மத்திய அரசை எதிர்க்க தைரியம் இல்லாமல் தி.மு.க.வையும், அதன் தோழமை கட்சிகளையும் வம்புக்கு இழுக்கும் வகையில் அதிமுகவினர் பேசி இருக்கிறார்கள் என்று தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. 

இதில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சிவகாசி பஸ்நிலையம் அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார். 

அப்போது அவர், "காவிரிக்காக இன்று தமிழகமே போர்க்கோலம் கண்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசியல் காரணங்களுக்காக பாரதீய ஜனதா அரசு நிறைவேற்றாமல் உள்ளது. கர்நாடக தேர்தலை மனதில் வைத்துகொண்டு காலம் தாழ்த்துவது தமிழக மக்களுக்கு துரோகம் செய்வது போல் ஆகும். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துவிட்டால் தமிழகத்தின் உரிமைகள் நிலை நிறுத்தப்படும். பதவி சுகத்துக்காக தமிழ்நாட்டின் உரிமைகள் இன்று விட்டுக்கொடுக்கப்படுகிறது.

அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தின்போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்து யாரும் பேசவில்லை. 

மத்திய அரசை எதிர்க்க தைரியம் இல்லாமல் தி.மு.க.வையும், அதன் தோழமை கட்சிகளையும் வம்புக்கு இழுக்கும் வகையில் பேசி இருக்கிறார்கள். 

தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ள கடை அடைப்பு போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டியது மக்கள் கடமை" என்று இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விருது நகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஸ்ரீராஜாசொக்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அர்ச்சுனன், முன்னாள் எம்.பி.க்கள் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், அழகிரிசாமி, 

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சதுரகிரி, மனிதநேய மக்கள் கட்சி அஜ்மீர்கான், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் இப்ராகீம்ஷா, இந்திய தேசிய லீக் ஜஹாங்கீர், ஆதிதமிழர் பேரவை பூவைஈஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர். 

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வனராஜா நன்றி தெரிவித்தார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios