அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்த வழக்கை நிராகரிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பியான கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, ‘பொதுச்செயலராக பதவி வகித்த ஜெயலலிதா மறைவுக்கு பின், 2017 செப்டம்பரில் பொதுக்குழுவை கூட்டி, பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் தன்னிச்சையாக விதிகளில் திருத்தம் செய்தனர். தேர்தல் நடத்தாமலேயே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று அறிவித்து கொண்டனர். இந்தப் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முறையான தேர்தல் இன்றி, பொதுச் செயலருக்கான அதிகாரங்களை பறிக்க, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் முயற்சிக்கின்றனர்.எனவே, தேர்தல் அறிவிப்பு செல்லாது என்று உத்தரவிட வேண்டும். வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்து தேர்தலை நடத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி அப்துல் குத்துாஸ் முன் விசாரணைக்கு வந்தது. 

இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து, விசாரணையை தள்ளி வைத்தார்.இதையடுத்து, வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் முடிந்து விட்டதால், வழக்கை தொடர்ந்து நடத்துவது பற்றி, நீதிபதி கேள்வி எழுப்பினார்.அதற்கு, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தியாகேஸ்வரன், வழக்கை தொடர்ந்து நடத்துவதாக தெரிவித்தார். 

தேர்தலை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி, அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்திருப்பதாக, மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், அரவிந்த் பாண்டியன் தெரிவித்தனர். இதையடுத்து, விசாரணையை பிப் 8க்கு நீதிபதி அப்துல் குத்துாஸ் தள்ளி வைத்தார்.