மக்கள் மீது எந்தவித அக்கறையும் காட்டாமல் தமிழக அரசு பொம்மை அரசாக செயல்படுகிறது, என திமுக மாநில துணை பொதுச்செயலாளர்        ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியிருக்கிறார்.

     திண்டுக்கல்லில் வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்தியாளர்களை சந்தித்தார் ஐ. பெரியசாமி.. "கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மருத்துவமனைகளில் முறையான வசதிகள் செய்துதரப்படவில்லை. வெண்டிலேட்டர்கள் இல்லை.திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மிகக்குறைவாகவே உள்ளது. நகரம், கிராமம் என பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். நோய்த்தடுப்பு நடவடிக்கையில் இந்த அரசு அக்கறை காட்டவில்லை.கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் குறித்த உண்மைத் தகவலை இந்த அரசு வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடுவதில்லை.

     வேலை இழப்பால் மக்கள் வாடகை செலுத்த முடியாமல், மின் கட்டணம் செலுத்த முடியாமலும், உணவுக்கே திண்டாடும் நிலையில் உள்ளனர், குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.இந்த அரசு, மக்கள் குறித்து எந்தவித கவலையும் இல்லாமல் செயல்படாத ஒரு பொம்மை அரசாக உள்ளது. சமூகப் பரவல் இல்லை எனத் தொடர்ந்து கூறிவருகின்றனர்.வணிகர்களை தாமாகவே முன்வந்து கடைகளை அடைக்கச்சொல்லும் அரசு டாஸ்மாக் மதுபானக்கடையை அடைக்க முன்வருவதில்லை ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.