கடந்த 5 ஆம் தேதி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதலமைச்சராவார் என பரவலாக பேசப்பட்டு அவர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில் ஆளுநர் மும்பையில் இருந்து தமிழகம் வராத காரணத்தால் பதவியேற்பு தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு பன்னீர்செல்வம் அதிரடியாகவும் சரவெடியாகவும் செய்தியாளர்கள் வழியாக சில கருத்துகளை மக்கள் முன் வைத்தார்.
அதில் தான் விருப்பட்டு பதவியை ராஜினாமா செய்யவில்லை எனவும், மிரட்டி வலுகட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்தார்கள் எனவும் வெடியை கொளுத்தி போட்டார்.
மேலும் தன்னை அவமானபடுத்தி விட்டதாகவும், இதுவரை கட்சி ஒற்றுமைக்காகவே பொறுமையாக இருந்தேன் எனவும் தெரிவித்தார்.
பன்னீரின் இத்தகைய பேட்டி கார்டன் வட்டாரத்தில் கொந்தளிப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து அதிமுக பொதுசெயலாளர் சசிகலா, பன்னீர்செல்வம் திமுகவின் கூட்டாளியாக செயல்படுவதாக குற்றம் சாட்டியதோடு அவரை பொருளாளர் பதவியிலிருந்து நீக்கினார்.
இதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம் என் மடியில் கனம் இல்லை அதனால் யாருக்கும் பயமில்லை என அதிரடியாக சசிகலாவை நேரடியாக விளாசினார்.
மேலும் தனக்கான பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிப்பேன் எனவும் பொதுமக்களை வீடு வீடுவாக சென்று சந்திப்பேன் எனவும் தெரிவித்தார்.
சசிகலா தரப்பும் பன்னீரின் தரப்பும் மாறி மாறி பதிலடி கொடுத்துவருவது மக்களின் மனதில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தற்போது சசிகலா ஆட்சியையை தக்கவைக்கவும் பதவி நாற்காலியை பிடிக்கவும் அமைச்சர்களுடனும் எம்.எம்.ஏக்களுடனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
யார் பின்னாலும் செல்லாமல் அதிமுக ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிகலா பேசியுள்ளார்.
மறுபுறம் பன்னீர் தனக்கான பெரும்பான்மையை நிரூபிக்க களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக வேலை பார்த்து வருகிறார்.
இதனால் பன்னீர்செல்வத்திற்கும் ஆதரவு பெருகி கொண்டு தான் வருகிறது.
யார் பக்கம் அதிக சட்டமன்ற உறுபினர்கள் வரப்போகிறார்கள் என்பதையும் தாண்டி அதிமுக ஆட்சி அமைக்குமா என சந்தேகம் வலுத்துள்ளது.
ஒரு கட்சி ஆட்சி அமைக்க 119 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் தற்போது உள்ள 134 தொகுதி எம்.எல்.ஏக்களின் ஆதரவு இரு தரப்பாக உடைந்துள்ளது.
இதில் ஆட்சி யார் கைக்கு போகும், என்பதை விட அதிமுக ஆட்சி தமிழகத்தில் தங்குமா என்பதே மக்கள் மனதில் கேள்விக்குறியாகி நிற்கிறது.
