உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்று அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். 

இதனையடுத்து, உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என அதிமுக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடுவோர்களும் 5 ஆண்டுகள் அதிமுக உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவில் உட்கட்சி தேர்தலில் திருத்தம் செய்யப்பட்டது சசிகலாவுக்கு செக் வைப்பதற்காகவே பார்க்கப்படுகிறது. சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுகவுடன் இணைவார் தலைமையேற்று நடத்துவார் என்ற செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், உட்கட்சி தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டதால் சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் அவரால் அதிமுகவில் எந்த பதவியையும் வகிக்க முடியாது என்றே கூறப்படுகிறது.