பம்பரமா சுத்தி வேலை செய்றாரு முதல்வர்..5 ஆயிரமும் கொடுத்துருவாரு பாருங்க.. ஸ்டாலினை பாராட்டிய செல்லூர் ராஜு
ஸ்டாலின் முதலமைச்சராக சுறுசுறுப்பாக பம்பரமாக பணியாற்றுகிறார் என்று முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
2022ஆம் ஆண்டின் முதல் நாள் இன்று தொடங்கியுள்ளது. புத்தாண்டு தினமான இன்று பலரும் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அதற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘அனைவரும் நோய் நொடியின்றி வாழ வேண்டியும், ஒமைக்ரான் கொரோனோ தொற்று நீங்க வேண்டியும் , கொரோனா இல்லாத உலகமாக மாற வேண்டும் என மீனாட்சியம்மனை குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தேன்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை அதிமுக அரசு செய்தது போல திமுக அரசும் செயல்பட வேண்டும். ஸ்டாலின் முதலமைச்சராக சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார். அவரோடு சேர்ந்த அனைவரும் பணியாற்றி கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
திமுக எதிர்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும் என்பதை திமுக அரசு செயல்படுத்தும் என நம்புகிறேன். ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் மற்றொரு ஊரடங்கு வருமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
மதுரை மாநகராட்சி கிராமம் போல உள்ளது. வீதியெங்கும் சாக்கடை பெருக்கடுத்து ஓடும் நிலை உள்ளது, அதிமுக சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வரும் 4ஆம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம். வரலாற்றில் இதுவரை எந்தவொரு இந்திய பிரதமரும் பேசாத வகையில் தமிழ் கலாச்சாரத்தையும், பெருமையையும் பற்றி பேசிவருபவர் மோடி. உலகெங்கும் தமிழர்களின் கலாச்சார பெருமையை பறைசாற்றிவருகிறார். பிரதமர் மோடியின் மதுரை வருகை என்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியது. மதுரை வரும் பிரதமரை தமிழக மக்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டும்' என்று கூறினார்.