ஆளுங்கட்சி மாநில மீனவர் அணி செயலாளர் நீலாங்கரை எம்.சி.முனுசாமி அதிமுகவில் இருந்து விலகி டிடிவி.தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுகவும், 3வது ஆட்சி கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் சசிகலா வருகை தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டு வருகிறது. 

இந்த சூழலில் கட்சிகளுக்கிடையே கட்சி தாவல் என்பது மிகவும் சாதாரணமான ஒன்று தான். ஆனாலும் அதிமுக மாநில மீனவர் அணி செயலாளர் நீலாங்கரை முனுசாமி அதிமுக கட்சியிலிருந்து விலகி தினகரன் கட்சியில் திடீரென இணைந்துள்ளார். 

இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான தொண்டர்கள் இருக்கவேண்டிய இடம் என்பதை அம்மாவின் நிஜமான தொண்டர்கள் ஏற்கனவே உணர்ந்திருக்கிறார்கள். அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக மாநில மீனவர் அணி செயலாளர் நீலாங்கரை எம்.சி.முனுசாமி அக்கட்சியில் இருந்து விலகி கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையை ஏற்று இன்று அமமுகவில் தன்னை இணைத்து கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார். இன்னும் சில நாட்களில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும் சூழலில் அமமுகவை எதிர்நோக்கி பலரின் பயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது.