மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே  வாக்கு வாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இரு தரப்புக்கும் ஆதரவாகவும் எதிராகவும் குரல் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக கூட்டத்தில் கருத்து மோதல் ?

அதிமுக தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது உட்கட்சி தேர்தல் தொடர்பாக பரபரப்பு கருத்து மோதல் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் வேலுமணியின் தலையீடு உட்கட்சி தேர்தலில் பல இடங்களில் அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டி பேசப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி, வைத்தியலிங்கம் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த இடத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் கோபத்தோடு வெளியேறினார். அவரை சமாதானம்படுத்தும் வகையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தொலைபேசியில் அழைத்து பேசினர்.இதனால் சமாதானம் அடைந்து மீண்டும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைத்தியலிங்கம் வந்தார். 

என் பேச்சை கேட்பதே இல்லை-ஓபிஎஸ்

முன்னதாக இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது,கட்சி ரீதியாக 25 மாவட்டங்களுக்கு மட்டுமே உட்கட்சி தேர்தல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். மீதமுள்ள மாவட்டங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது கட்சியை பொறுத்தவரை நான் சொல்வது எதுவும் நடைபெறுவதில்லையென தெரிவித்தவர், அவரவர் இஷ்டப்படி தான் மாவட்ட செயலாளர்கள் நியமனம் நடைபெறுவதாக வேதனையோடு தெரிவித்தார். எனவே கட்சி நலனுக்காக ஒரு சில மாவட்ட செயலாளர்களை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் ஓபிஎஸ் ஆதரவாக கருத்து தெரிவித்தார்.இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

மாவட்ட செயலாளர்களை நீக்க முடியாது

இந்த வாக்குவாதத்திற்கு இடையே தொடர்ந்து பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி,25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் எப்படி மாவட்ட செயலாளர்களை நீக்க முடியும் என கேள்வி எழுப்பினார். எனவே அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் முடிவடைந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுபோம் என கூறினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் இறுதியாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே உட்கட்சி தேர்தலில் அதிகாரம் படைத்தவர்களாக இருக்க வேண்டும் என பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவில் நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்ட கருத்து மோதல் கொங்கு மண்டலம் மற்றும் தென் மண்டலங்களாக பிரிந்து இருந்தது வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.