2 ஆண்டு பிறகு அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் அக்கட்சி தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி மரணமடைந்தபோது அ.தி.மு.க. ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் முயற்சி செய்தனர். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றதால் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உறவினர் டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கிய போதிலும் மக்கள் அந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற கனவுடன் இருந்த சசிகலா, அதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தன்னை தேர்வு செய்ய செய்திருந்தார். ஆனால் அவரை முழுமையாக அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்ட செய்ய வேண்டும் என்பதற்காக கைகோர்த்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. சட்ட விதிகளில் திருத்தம் செய்து, பொதுச்செயலாளர் பதவியை அதிரடியாக ஒழித்தனர். அதோடு அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பாளர் குழு வழி நடத்தும் என்று புதிய கட்சி விதியை உருவாக்கினார்கள்.

அதன்படி 4 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளனர். இந்த குழுதான் தற்போது அ.தி.மு.கவை வழி நடத்தி வந்தனர். மேலும், வருடத்துக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டிய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த 2 ஆண்டு கூட்டப்படவில்லை. இதனால் நிர்வாகிகள் மத்தியில் இரட்டை தலைமை இருக்கக்கூடாது என ஒன்றை தலைமை தான் வேண்டும் என்று அவ்வப்போது நிர்வாகிகள் குரல் எழுப்பி வந்தனர். 

இந்நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ளதாக அக்கட்சி அதிகாராப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை வானகரத்தில் ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் வரும் 24-ம் தேதி காலை 10.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.