கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் முன்னாள் எம்எல்ஏ S.G.சுப்பிரமணியம் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன், செந்தில்பாலாஜி, S.G.சுப்பிரமணியம் உள்ளிட்ட 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 2017ம் ஆண்டு உத்தரவிட்டார். இதனையடுத்து, டிடிவி.தினகரன் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக மீண்டும் தாய் கழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் இணைந்தார். 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான சாத்தூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த சுப்பிரமணியம் தினகரன் தொடங்கிய அமமுக கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளராக கட்சியின் பயணித்து வந்தவர். 

இது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்;- கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடத்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், S.G.சுப்பிரமணியம் (சாத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.