சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் கைதான அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டிலிருந்து காணாமல் போனார். இதுகுறித்து கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 10-ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபருடன் வீட்டைவிட்டு வெளியேறியது தெரியவந்தது. சுசீந்திரம் பகுதியில் பதுங்கி இருந்த அவர்களைக் கோட்டாறு போலீசார் மீட்டனர்.

கடத்தப்பட்டது சிறுமி என்பதால் இந்த வழக்கை நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில் சிறுமி கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். குழந்தைகள் நல அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 2017-ம் ஆண்டு முதல் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் மற்றும் சிலர் தன்னை பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். இந்தச் செயலுக்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன்,  சிறுமியின் தாய் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 27-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நாஞ்சில் முருகேசன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். நாஞ்சில் முருகேசன் தலைமறைவான நிலையில் சிறுமியின் தாய் உட்பட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, நெல்லையில் பழங்கியிருந்த  நாஞ்சில் முருகேசனை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், நாஞ்சில் முருகேசனை சிறையில் அடைக்க மருத்துவ பரிசோதனை நடத்தியதில் அவருக்கு  ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் அதிகமாக இருந்ததாகக் கூறி நாஞ்சில் முருகேசன் குமரி மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.