புதுச்சேரி அதிமுக மாநில செயலாரும், மணவெளி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புருஷோத்தமன் விஷவண்டு தாக்கிய உயிரிழந்த சம்பவம் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி மணவெளி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும் அ.தி.மு.க-வின் புதுச்சேரி மாநிலச் செயலாளருமான புருஷோத்தமன் அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்திருக்கும் சிறுவள்ளிக் குப்பத்தில் பூர்வீக விவசாய நிலங்கள் உள்ளன. தினமும் புதுச்சேரியில் இருந்து கிளம்பிச் சென்று நிலங்களை பார்வையிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். 

அதன்படி நேற்று காலை தனது நிலத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அப்போது திடீரென மழை பெய்தது. அப்போது, மழைக்காக  ஓரம் இருந்த மரத்தின் கீழ் புருஷோத்தமன் ஒதுங்கியிருக்கிறார். அப்போது அங்கிருந்த விஷ வண்டு புருஷோத்தமனை கடித்துள்ளது. இதனால், மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சந்திக்க போகும் போது அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் பவ்வியமாக தோளில் இருக்கும் துண்டை எடுத்துவிட்டுச் செல்லும்போது, பச்சைக்கலர் துண்டை தோளின் இருபுறமும் போட்டுக் கொண்டு ஜெயலலிதாவின் பக்கத்தில் நிற்கும் ஒரே தொண்டர் இவர் மட்டும்தான் என்றும் கூறப்படுகிறது.