Asianet News TamilAsianet News Tamil

12 டன் முந்திரி லாரியை கத்தியை காட்டி கடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது..!

கன்னியாகுமரியில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக லாரியில் கொண்டு செல்லப்பட்ட 12 டன் முந்திரியை, லாரியுடன் கடத்திய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
 

AIADMK ex-minister's son arrested for abducting 12 tonne cashew lorry
Author
Tamil Nadu, First Published Nov 27, 2021, 11:04 AM IST

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங் கத்தியைக் காட்டி மிரட்டி, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான முந்திரிப் பருப்பை லாரியுடன் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக லாரியில் கொண்டு செல்லப்பட்ட 12 டன் முந்திரியை, லாரியுடன் கடத்திய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.AIADMK ex-minister's son arrested for abducting 12 tonne cashew lorry

ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்தவர், சி.த.செல்லப்பாண்டியன். தூத்துக்குடி அதிமுகவிலும் முக்கியப் புள்ளி. இவரது 2-வது மகன் ஜெபசிங் ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருக்கும் வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்துதான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார் செல்லப்பாண்டியன்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் என இரட்டைத் தலைமை வந்தபோது, இவரிடம் இருந்த ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால், அதிருப்தியில் இருந்த இவரை சமாதானப்படுத்தும் வகையில் கடந்த ஆட்சியின் இறுதியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் தலைவர் பதவியில் அமர்த்தினார்கள்.

இந்நிலையில், ஏற்கெனவே தான் சம்பந்தப்பட்ட வீடியோ வைரல் ஆனதாலேயே அப்பாவின் அமைச்சர் பதவியை பறிக்கவைத்த ஜெபசிங், இப்போது இன்னொரு சிக்கலிலும் செல்லப்பாண்டியனை இழுத்துவிட்டிருக்கிறார். ஆம், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான முந்திரிப் பருப்புகளை கடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார் ஜெபசிங்.AIADMK ex-minister's son arrested for abducting 12 tonne cashew lorry

“குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு முந்திரி ஆலையில் இருந்து 12 டன் எடை கொண்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான முந்திரி பருப்புகள் தூத்துக்குடி துறைமுகத்திற்காக நேற்று இரவு கொண்டு வரப்பட்டது. இங்கிருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யவே அந்த முந்திரி ஆலை இதை அனுப்பி வைத்தது. இந்த லாரியை ஹரி என்பவர் ஓட்டி வந்தார். தூத்துக்குடியில் உள்ள புதுக்கோட்டைப் பகுதியில் லாரி வந்துகொண்டிருந்தபோது, லாரியை ஒரு கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்றுவிட்டது. நடுவழியில் இறக்கிவிடப்பட்ட டிரைவர் ஹரி, உடனே இந்த விஷயத்தை தனது மேலாளர் ஹரிஹரனை தொடர்புகொண்டு சொல்லியிருக்கிறார். ஹரிஹரன், இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

உடனே, தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து இரவோடு, இரவாக லாரியைத் தேடினோம். லாரியில் இருந்த ஜிபிஎஸ் கருவியையும் நீக்கிவிட்டு, மர்ம கும்பல் லாரியை ஓட்டிச் சென்றது அப்போதுதான் தெரியவந்தது. இருந்தும், கடத்தப்பட்ட லாரி நாமக்கல் நோக்கிச் செல்வதைப் புலனாய்வு செய்து கண்டுபிடித்து பின் தொடர்ந்தோம். இதைத் தெரிந்துகொண்டு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மேட்டுக்காடு என்ற பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு, கடத்தல்காரர்கள் தப்பியோடி விட்டனர்.

AIADMK ex-minister's son arrested for abducting 12 tonne cashew lorry

அதேநேரம் நாமக்கல் எல்லையான திம்மநாயக்கன்பட்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு கார் நின்றது. அதில் இருந்தவர்களைப் பிடித்து விசாரித்தபோது முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங்கும், அவரது கூட்டாளிகள் 6 பேரும் அதில் இருந்தனர். தொடர்விசாரணையில் லாரியைக் கடத்தியது செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங் தலைமையிலான கும்பல்தான் எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்தக் கும்பலை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மீட்கப்பட்ட லாரி ஆகியவற்றையும் கைப்பற்றினோம். கைதுசெய்யப்பட்ட அனைவரும் தூத்துக்குடி மாவட்டத்துக்கு அழைத்துவரப்படுகிறார்கள்” என்றார்கள் காவல் துறை வட்டாரத்தில்.

அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் முந்திரி லாரியைக் கடத்திய வழக்கில் கைதாகி இருப்பது தூத்துக்குடி, குமரி மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios