முதல்வர் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தனர். அதேபோல், இன்று காலை மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு கொரோனா உறுதியானதால், அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சென்னை கிண்டியில் இருக்கும் கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை எழுந்த நிலையில், முதல்வர் வேட்பாளரை அறிவிக்க கடந்த 7ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில், கோகுல இந்திராவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.