மேற்கு வங்கத்தில் ஆளுநர் சட்டசபையையே முடக்கியது போல, தமிழ்நாட்டிலும் அது நடக்கும் என்றும், திமுக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலத்தில் பிரச்சாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'தேர்தலை அறிவித்து விட்டோம். நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு கேட்பது தானே முதல்வருக்கு அழகு. நாங்கள் எதிர்கட்சியினரை, மக்களை அப்படித்தானே சந்தித்தோம். அந்த தெம்பு, திராணி உங்களுக்கு இல்லையே. அந்த தெம்பு இல்லாமல்தான் முறைகேடு சம்பங்களில் ஈடுபட திமுகவினர் துடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் நேர் வழியில் வந்ததாக சரித்திரமே கிடையாது. மேற்கு வங்கத்தில் என்ன ஆனது என்று பார்க்க வேண்டும். மேற்கு வங்கத்தில் ஆளுநர் அங்கு சட்டசபையையே முடக்கி உள்ளார். அதே தமிழ்நாட்டிலும் இதேபோல் ஆட்சியில் தவறுகள் நடந்தாலும் ஆளுநர் சட்டசபையை முடக்கும் நிலை ஏற்படலாம். அதே நிலைமை இங்கே தமிழ்நாட்டிலும் எதிர்காலத்திலும் நிலவும். 

திமுக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்று கூறினார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் மேற்குவங்க சட்டப்பேரவையை முடக்கிய ஆளுநர் செயலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ’ மேற்கு வங்காள ஆளுநரின் சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்த செயல், உயர்ந்த பதவியில் இருந்து எதிர்பார்க்கப்படும் எந்த உரிமையும் இல்லாமல், நிறுவப்பட்ட விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் 'குறியீட்டு' தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் சேகர்பாபு இதுகுறித்து பேசிய போது, ‘தமிழக சட்டமன்றத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது. அதிமுகவின் ஆசையை அவர் மத்திய அரசுக்கு தனது பேச்சின் மூலம் மறைமுகமாக தெரியப்படுத்தியுள்ளார். சட்டசபையை முடக்கினால் தான் அடுத்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளதாக இதை பார்க்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். 

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இதுகுறித்து பேசிய போது, ‘அதிமுகவை பாஜக தான் அதிமுகவை இயக்குகிறது என்று தொடர்ந்து நாங்கள் விமர்சித்து வருகிறோம். தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் செய்தி தொடர்பாளராகவே மாறி பேசி வருகிறார்.பாஜக அதிமுகவின் கூட்டணியில் இருந்து விலகி போனாலும், பாஜகவின் தயவில் தான் அதிமுக இருக்கிறது என காட்டிக்கொள்ளும் வகையில் அதிமுகவின் தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால் அது உள்ளபடியே வேடிக்கையாக இருக்கிறது’ என்று கூறினார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்து, தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.