புற்றீசல்களை போல அரசியல் வாரிசுகள் களமிறங்கி வருகின்றனர். அந்த வகையில் இப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வலதுகரமான எ.வ.வேஉவின் மகன் கம்பன் களமிறங்க தயாராகி வருகிறார் எனக் கூறப்படுகிறது. 

திமுக புதிய பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்படுவது ஏறக்குறைய உறுதி ஆகிவிட்டது. துரைமுருகன் தற்போது வகிக்கும் பொருளாளர் பதவி யாருக்கு? என்பதுதான் விவாதமே. அந்தப் பதவியை எ.வ.வேலு கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவின் மகன் கம்பன் அரசியலில் குதிக்கப் போவதாக பேசிக் கொள்கிறார்கள். கல்வி நிறுவனங்களை கவனித்து வந்த கம்பன் திடீரென கிளம்பி, கேரளாவில் சிக்கியிருக்கிற ஜவ்வாது மலையைச் சேர்ந்த தொழிலாளர்களை மீட்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார். கலசபாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று முகக்கவசம், சானிடைசர்களை வழங்கி வருகிறார். தி.மு.க., என்றாலே வாரிசு அரசியல் தானே என்று அந்த மாவட்டத்தை கடந்து செல்ல முடியவில்லை. அதிமுகவிலும் அரசியல் வாரிசு களமிறங்க தயாராகி வருகிறது.

இந்து அறநிலையதுறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மகன் விஜயும் இப்போது அப்பாவை விட அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு வருகிறார். சில நேரங்களில் அப்பாவுக்கு பதில் அதிகாரிகளுக்கு இவரே கட்டளையிட்டு வருவதாகவும் அந்தத் தொகுதி மக்கள் கூறுகின்றனர். ஆகையால் விஜயும் விரைவில் அரசியலில் குதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.