ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்றதை தொடர்ந்து தலைவர், துணைத்தலைவருக்கான மறைமுகத்தேர்தல் வருகிற 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.

 

மொத்தம் உள்ள 5,090 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. 2,100 இடங்களிலும், அ.தி.மு.க. 1,781 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதே போல மற்ற கட்சிகளும், சுயேட்சைகளும் பல இடங்களில் வென்றுள்ளன. இதையடுத்து சுயேட்சை கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு அ.தி. மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன.

சுயேட்சை கவுன்சிலர்களை கடத்துவதற்கும் பல இடங்களில் முயற்சி நடந்துள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க, தி.மு.க. கவுன்சிலர்களும் பல இடங்களில் கடத்தப்பட்டுள்ளனர். கவுன்சிலர்கள் பலர் அணி மாறவும் இப்போதே தயாராகி வருகிறார்கள். இதனால் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை பிடிக்க அ.தி.மு.க- தி.மு.க. அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

2 கூட்டணிகளைச் சேர்ந்தவர்களும் பதவியை பிடித்து விட வேண்டும் என்று தீவிரம் காட்டி பணத்தை வாரி இரைத்து வருகின்றனர். இதனால், அதிமுக-திமுக கட்சிகள் மாறி மாறி கவுன்சிலர்களை கடத்த ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.