எந்த கட்சியுடனும் பிற கட்சிகள் கூட்டணி வைக்கலாம். ஆனால், எந்த காலகட்டத்திலும் திமுக- அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பும் இல்லை. வழியும் இல்லை. ஆனால், சரித்திர வேதனையாக சிவகங்கை மாவட்டத்தில் மணல் மாஃபியாக்கள் சுயமரியாதையை பொக்லைனில் போட்டு குழிபறித்து அதிமுக- திமுக கூட்டணியை அமைத்து விட்டார்கள். பல லட்சம் செலவழித்து தனது சொந்தக்காசில் குளங்களை தூர்வாரிய சிவகங்கை மாவட்ட ஆட்சியரை உயர்நீதிமன்றமே பாராட்டியது. அப்படிப்பட்ட நேர்மையான ஆட்சியரை மணல் மாஃபியாக்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு மிரட்டி பணத்தை மூட்டை மூட்டையாக கட்டி சிவகங்கை மாவட்டத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 

கலெக்டரையே மிரட்டும் அளவுக்கு செல்வாக்கு பெற்றவர்களா? யார் அவர்கள்? அதிமுக அமைச்சர் பாஸ்கரனும், மாவட்ட செயலாளர் செந்தில் நாதனும் கைகோர்த்துக் கொண்டு திமுக முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் கோஷ்டியுடன் கூட்டணி அமைத்து மணல் கொள்ளையில் ஈடுபடுவது, தங்களது சொந்தங்களை மட்டுமே கட்சிப்பதவிகளில் அமர்த்துவது என தனி சாம்ராஜ்ஜியம் நடத்தி சிவகங்கை மாவட்டத்தை சின்னாபின்னமாக்குவதோடு, இந்த மாவட்ட அதிமுகவை அடியோடு அழிக்கும் பணியில் ஈடுபவடுவதாக ரத்தத்தின் ரத்தங்களே கொதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து பேசிய சிவகங்கை மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர், ‘’திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் என்கிற பாட்டு வரும். அதை கொஞ்சம் மாற்றிப்பாடினால் சிவகங்கையின் மணலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்... என்று பொறுத்தமாக இருக்கும். இந்த மாவட்ட அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், திமுக எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பண், அமமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ கே.கே.உமாதேவன் ஆகிய நால்வரும் சிண்டிகேட் அமைத்து மணல்வளத்தை சுரண்டி கோடிக்கணக்கான ரூபாய்களை வாரிக்குவித்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் மாலை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் உள்ள வேலுநாச்சியார் மாளிகையில் ஒன்றுகூடி பணத்தை பிரித்துக் கொள்கிறார்கள். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 60க்கும் மேற்பட்ட மணல்குவாரிகளுக்கு அனுமதி வாங்கி இருக்கிறார்கள். 

மாவட்ட ஆட்சியரிடம் சவுடு மண் அள்ளுவதாக அனுமதி பெற்று மணல் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்திப்பார்க்கிறார்கள். பொதுமக்கள் லாரிகளை சிறைபிடிக்கிறார்கள். ஆனாலும் அவர்களது அரசியல் பலத்துக்கு முன் எதுவும் நடக்கவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் 60 குவாரிகளில் 35 குவாரிகள் திமுகவினரிடம் தான் இருக்கிறது. மீதமுள்ளதில் ஒரு சில குவாரிகளை அமமுகவினருக்கு கொடுத்துவிட்டு மற்ற குவாரிகள் அனைத்தும் செந்தில்நாதன் குடும்பத்தினர், அமைச்சர் பாஸ்கரன் குடும்பத்தினரின் பெயரில் இயங்கி வருகிறது. இந்த மாவட்டத்திற்கு 2 ஆயிரம் மணல் லாரிகள் ஊரடங்கின் போதுகூட, அலைகிறது.  இங்கிருந்து தேனி, கம்பம் வழியாக கேரளா வரை இந்த மணல் செல்கிறது. இளையாங்குடி அருகே உள்ள குவாரியை அமமுகவை சேர்ந்த கே.கே.உமாதேவன் நடத்தி வருகிறார். மாங்குடியில் உள்ள குவாரியை திமுக பிரமுகர் சண்முகவடிவும், தேவகோட்டை அருகே உள்ள குவாரியை செந்தில்நாதன் உறவினர் பிர்லா கணேஷும் மல்லாங்குடியில் உள்ள குவாரியை திமுக பிரமுகரும் நடத்தி வருகிறார்கள்.

                                                                 நடுவில் மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன்

தேவகோட்டையில் செந்தில்நாதனின் சின்னம்மா மகன்பிர்லா கணேஷனை சேர்மனாக வெற்றிபெற வைக்க திமுக மாவட்ட செயலாளர் பெரிய கருப்பன் திமுகவிலிருந்து டம்மி வேட்பாளரை களமிறக்கினார். அதற்கு பிரதிபலனாக திருப்பத்தூரில் பெரிய கருப்பணின் மைத்துனர் சண்முகவடிவை சேர்மனாக்க அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் அதிமுக சார்பில் டம்மி வேட்பாளரை களமிறக்கி தன் கட்சியை தோற்கடித்தார்.  அதிமுக சேர்மனாக உள்ள சண்முகவடிவுக்கு  சென்னை அண்ணாநகரில் இரண்டு எலைட் பார்கள் இருக்கிறது. அதற்கு அனுமதி பெற்றுத்தந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா. காரணம் சாதிப்பாசம். 

செந்தில்நாதனின் சின்னம்மா மகன் அசோகன் ஆவின் சேர்மனாக பதவி வகிக்கிறார். செந்தில்நாதன் மனைவியின் அண்ணியார் மகன் ஆவின் மேனேஜராக நியமிக்கப்பட்டுள்ளார். கல்லல் ஒன்றிய கவுன்சிலராக தனது மனைவியின் தாய்மாமா மகன் அசோகனுக்கு வாய்ப்பு கொடுத்து வெற்றி பெற வைத்துள்ளார் செந்தில்நாதன். 43 பஞ்சாயத்துக்களை கொண்ட தேவகோட்டை பகுதிக்கு 2 ஒன்றிய செயலாளர்களை நியமித்துள்ளார்.

41 பஞ்சாயத்துக்களை கொண்ட சிவகங்கைக்கு 2 ஒன்றிய செயலாளர்கள்.  32 பஞ்சாயத்துக்களை உள்ளடக்கிய கல்லல் பகுதிக்கு மட்டும் 3 ஒன்றியச்செயலாளர்கள். 40 பஞ்சாயத்துக்களை கொண்ட திருப்பத்தூர் பகுதிக்கு 3 ஒன்றிய செயலாளர்களை தன் இஷ்டப்படி உருவாக்கிக் கொடுத்துள்ளார் செந்தில் நாதான். அந்த ஒன்றிய செயலாளர்கள் பெரும்பாலானவர் செந்தில் நாதனின் உறவினர்கள். இப்படி நியமித்துக் கொள்ள காரணம், தங்கள் குடும்பத்தை தாண்டி சிவகங்கை மாவட்டத்திற்குள் யாரும் வந்துவிடக்கூடாது என நினைக்கிறார். கட்சி நிர்வாகிகளை பலவீனப்படுத்துவதற்காக சிங்கம்புணரி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து தனது வீட்டில் வேலை பார்த்து வந்த சிறு வயதுக்காரரை ஒன்றியச் செயலாளராக்கி இருக்கிறார்.

 

சிவகங்கை மாவட்டத்தில் ஒன்று பெரியகருப்பன் பதவிக்கு வரவேண்டும். இல்லை தான் வரவேண்டும். இருவரில்  யார் வந்தாலும் கூட்டணி போட்டு கொள்ளையடிப்பது தான் செந்தில்நாதனின் அஜெண்டா. பாஜகவுடன் அதிமுக சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்தால் காரைக்குடி தொகுதியை பாஜக சார்பில் ஹெச்.ராஜா கேட்பார் என நினைக்கிறார் செந்தில்நாதன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் செந்திநாதனின் சின்னம்மா மகன் அசோகன் பெரிய கருப்பனை எதிர்த்து போட்டியிட்டார். 43 அயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். சென்னையில் வசித்து வரும் பைனான்சியர் சிவமணி செந்தில்நாதனுக்கு நெருக்கம். அந்த வகையில் திமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்த சிவமணியில் சித்தப்பா வடிவேலுக்கு கட்சியில் சேர்ந்த நான்காவது மாதமே சீட் கொடுத்து 123 வது வட்ட கவுன்சிலர் ஆக்கினார் செந்தில் நாதன்.  இந்த வடிவேலு செந்தில்நாதன் மீது வழக்கே போட்டவர். 

15 ஆண்டுகளாக சிவகங்கை மாவட்ட செயலாளராக இருக்கிறார் செந்திநாதன். திவாகரன் இல்லையென்றால் மாவட்ட செயலாளர் ஆகியிருக்கவே மாட்டேன். இப்படியொரு பதவியும், செல்வாக்கும் கிடைத்திருக்காது என அடிக்கடி பொதுவெளியில் சொல்லிக்கொள்ளும் செந்தில்நாதன், சசிகலா பாசத்தில் அமமுகவினருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். சாதிப்பாசத்தால் சசிகலா மீது கொண்ட நேசம் குறையவில்லை. இந்தப்பகுதியை பொறுத்தவரை ஓ.பி.எஸ்- டி.டி.வி.தினகரன் ஆகியோருடன் நெருங்கி பழகி அமைச்சர் பாஸ்கரனும், செந்தில்நாதனும் நம்பிக்கை வைத்துள்ள எடப்பாடியாருக்கு பாவகாரியத்தை செய்கிறார்கள்.

அதேபோல் பாஸ்கரனும், செந்தில்நாதனும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள். செந்தில் நாதன் சார்பாக அவரது சொந்தங்கள் மணல் கடத்தலிலும், பதவிகளில் இருந்து வருகிறார் என்றால் பாஸ்கரனின் மூன்று மகன்களும் இந்த காரியங்களை கவனித்துக் கொள்கிறார்கள். கருணாகரன் கட்சியில் மாநிலப் பொறுப்பில் இருக்கிறார். வழக்கறிஞராக இருக்கும் பாலாவும் மற்றொரு மகனும் லோக்கல் அரசியல், பஞ்சாயத்துக்களை கவனித்து வருகிறார்கள். தனக்கு பசையுள்ள மதவி கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கத்தில், கட்சியினரை பற்றியும், மக்களை பற்றியும், கட்சியின் எதிர்காலம் பற்றியும் கவலை கொள்ளாமல் பாவகாரியங்களை செய்யத்துணிந்து விட்டார் அமைச்சர் பாஸ்கரன். இவர்கள் ஒவ்வொருவரிடமும் 500 கோடி ரூபாய்களுக்கும் மேல் பணம் புழங்குகிறது. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க முயன்றால் அதிகாரத்தை வைத்து அவரையே மிரட்டுகிறார்கள். ஆகையால் அவரது கைகள் கட்டப்பட்டு விடுகின்றன.

  

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த விவகாரம் எல்லாம் தெரியுமா? என்பதெல்லாம் தெரியவில்லை. நிலைமை இப்படியே சென்று கொண்டு இருந்தால் இந்த கும்பலை எதிர்த்து நாள்தோறும் போராடிக் கொண்டு இருக்கும் மக்களிடம் அதிமுக செல்வாக்கை இழக்கும் என்பது நிச்சயம். அதிமுகவின் மானம் காத்த தொகுதி மானாமதுரை என்பார்கள். இப்படியே போனால் சிவகங்கை மாவட்டத்தில் அதிமுகவினரின் மானம் போய்விடும்’’ என கவலை கொள்கிறார் அந்த நிர்வாகி.