அதிமுக கூட்டணியில் குறைந்த சீட்டுகள் கொடுத்ததால், திமுகவுடன் ரகசிய பேச்சு நடத்தியதும், அந்த பேச்சு வெளியானதால், மீண்டும் சீட்டுக்காக அதிமுகவிடம் காத்திருக்கும் நிலைக்கு விஜயகாந்த் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் தே.மு.தி.க. நேற்று இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி இறுதி செய்யப்படாமல் இழுபறி நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. 

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலானா கூட்டணியில் பாமகவுக்கு 7 சீட், பாஜகவுக்கு 5 சீட், புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் தேமுதிகவும் இடம்பெற வேண்டும் என்று பாஜக மேலிட தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். 

தேமுதிக தரப்பிலோ பாமகவுக்கு இணையான தொகுதி தர வேண்டும் என விடாப்பிடியாக இருந்து வந்தது. அதிமுக தரப்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதியில் 4 சீட் என்றும், பின்னர் 5 சீட் என்றும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.  

இந்நிலையில், 6-ம் தேதிக்குள் அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு, கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பேச வேண்டும் என்றும் பாஜக மேலிடம் அதிமுக தலைமைக்கு கட்டளையிட்டது. இதனால், 6-ம் தேதிக்குள் தேமுதிகவை கூட்டணியில் எப்படியும் சேர்த்துவிட வேண்டும் என்று அதிமுகவினர் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே நேற்று காலை தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டு கூட்டணி தொடர்பாக அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேமுதிக தரப்பில் பிற்பகல் வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.  

இந்நிலையில் சென்னை விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் தே.மு.தி.க. துணைச் செயலாளர் சுதீஷ் நடத்திய பேச்சுவார்த்தையில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்பின்போது எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று இரவு பியூஸ் கோயல், அமைச்சர் வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் சுதீஷ் மீண்டும் சந்தித்துப் பேசினார். 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த முடிவும் ஏற்படாமல் இழுபறி நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.