அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 20-ம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்  கூட்டாக அறிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு மத்தியில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில், பாஜக, அதிமுக இடையேயான கூட்டணியில் முட்டல் மோதல்கள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பாஜகவின் வேல் யாத்திரையை ஆளும் அதிமுக அரசு முடக்க தடை விதிப்பதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. 

இந்நிலையில்,  சனிக்கிழமை தமிழகத்திற்கு வருகை தரும் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, அதிமுக உடனான கூட்டணி குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும், கூட்டணி தலைவர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.ஆகையால், அமித்ஷா வருகைக்கு ஒருநாள் முன்னர் வெள்ளிக்கிழமை, அதிமுக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கழகத்தில் 20.11.2020 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மேலே குறிப்பிப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் கூட்டணி குறித்தும் விவாதிக்ப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.