5 தொகுதிகள் தான் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளதால் அந்த கூட்டணியில் இணைய தயக்கம் காட்டு விஜயகாந்துக்கு தினகரன் வலை விரித்து வருகிறார்.

கூட்டணி கட்சிகள் அனைத்திற்கும் தொகுதிகளை ஒதுக்கி திமுக நேற்று கடையை சாத்திவிட்டது. இதனால் தேமுதிகவிற்கு இருந்த வாய்ப்புகளில் ஒன்று முடிந்து போனது. எனவே தற்போதைய சூழலில் ஒன்று அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் இணைய வேண்டும். அல்லது 3வது அணி அமைக்கும் முயற்சியில் விஜயகாந்த் ஈடுபட வேண்டும். ஆனால் இந்த தேர்தலை பொறுத்தவரை 3வது அணி கிடையாது என்று பிரேமலதா துவக்கத்தில் இருந்தே தெரிவித்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாமகவை விட குறைவான தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டு அதிமுக கூட்டணியில் இணைவது மிகப்பெரிய அவமானம் என்று அனைத்து நிர்வாகிகளும் ஒரே குரலில் கூறியுள்ளனர். அவர்கள் பேசியதை கேட்டு பிரேமலதாவே ஒரு கட்டத்தில் ஆடிப்போய்விட்டாராம். அதிமுக இருக்கும் நம்பிக்கையில் திமுகவை டீலில் விட்ட நிலையில் அந்த கட்சி தற்போது கூட்டணி கதவை சாத்திவிட்டது. 

இந்த நிலையில் அதிமுகவுடன் தான் கூட்டணிக்கான வாய்ப்பு தேமுதிகவிற்கு இருக்கிறது. ஆனால் அதிமுக தரப்போ 5 தொகுதிகள் என்பதை தாண்டி தருவதற்கு ஒன்றும் இல்லை என்று கைவிரித்துள்ளது. இந்த நிலையில் இன்றைக்குள் கூட்டணியை உறுதிப்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க – அதிமுகவிற்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால் விஜயகாந்தோ பிடிகொடுக்காமல் இருக்கிறார். இப்படி ஒரு இழுபறியான சூழல் இருப்பதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள தினகரன் தயாராகியுள்ளார். 

தன்னுடன் வந்தால் தேமுதிகவிற்கு 14 தொகுதிகள் தர தயார் என்று அதிரடியாக ஒரு தூது அனுப்பியுள்ளதாகவும் அந்த தூது சுதீசை சந்தித்து பேசிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் 3வது அணி இந்த முறை இல்லை என்பதில் தாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தேமுதிக தினகரன் தரப்புக்கு உடனடியாக பதிலும் அளித்துள்ளது. ஆனால் வெறும் 7 தொகுதிகளுக்காக அதிமுகவை கெஞ்சிக் கொண்டிருப்பதற்கு தன்னுடன் வந்தால் 14 தொகுதிகளை விட கூடக்  குறைவாக கூட பேசிக் கொள்ளலாம் என்று மறுபடியும் தினகரன் விஜயகாந்த் தரப்புக்கு ஆசையை தூண்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆசை பிரேமலதாவை யோசிக்க வைக்கும் பட்சத்தில் தமிழகத்தில் இந்த முறையும் 3வது அணிக்கான வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.