Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் வீடு,கடை வாடகை பல மடங்கு உயர வாய்ப்பு...? பொதுமக்களை எச்சரிக்கும் ஓபிஎஸ்

ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த வழிவகை செய்திருக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்) சட்டமுன்வடிவை தமிழக அரசு திரும்பப் பெற தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

AIADMK coordinator O Panneer Selvam has warned that there is a possibility of rising house rents in Tamil Nadu
Author
Tamilnadu, First Published May 12, 2022, 11:39 AM IST

சொத்து வரி உயர்வால் மக்கள் பாதிப்பு

சொத்து வரி உயர்வால் மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதால் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படமாட்டாது” எனத் தேர்தலில் வாக்களித்த தி.மு.க., கொரோனாவின் தாக்கம் முடிவடையாத நிலையில், ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் சொத்து வரியை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் மன்றத் தீர்மானங்கள் மூலம் மாநகராட்சிகள், நகராட்சிகள் சொத்து வரியை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்யும் சட்டமுன்வடிவினை தி.மு.க. அரசு நிறைவேற்றியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. சொத்து வரியை ஆண்டுதோறும் உயர்த்த வழிவகை செய்யும் சட்டமுன்வடிவிற்கு அறிமுக நிலையிலும், பரிசீலனை நிலையிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தும், அதனைப் புறந்தள்ளிவிட்டு மேற்படி சட்டமுன்வடிவு இயற்றப்பட்டதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச நிலைமைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தி.மு.க., தற்போது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மன்றங்களால், தீர்மானத்தின் மூலம் அவ்வப்போது, அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வீதங்களுக்குள் சொத்து வரியினை உயர்த்த வழிவகை செய்துள்ளது எவ்விதத்தில் நியாயம்? இவ்வாறு செய்வதன் மூலம், சொத்து வரி உயர்வு பற்றி மக்கள் கேள்வி கேட்டால் உள்ளாட்சி அமைப்புகள் மீது பழியை போட்டு விடலாம் என்று தி.மு.க. அரசு நினைக்கிறது போலும்! ஒருவேளை இதுதான் திராவிட மாடலோ என்னவோ!

AIADMK coordinator O Panneer Selvam has warned that there is a possibility of rising house rents in Tamil Nadu

வீடு கடை வாடகை உயர வாய்ப்பு 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் சிறிய அளவில் மாற்றம் செய்தாலும் அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் இருக்கின்ற சலுகைகளை, திட்டங்களை முடக்குகின்ற அரசாக இருக்கிறது. 'பட்ட காலிலே படும்' என்ற பழமொழிக்கேற்ப சோதனை மேல் சோதனைகளை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கை காரணமாக பாதிக்கப்படுபவர்கள் வாடகைக்கு குடியிருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள். ஏற்கெனவே ஆண்டுக்கு ஒரு முறை வாடகை உயர்ந்துக் கொண்டிருக்கின்ற நிலையில், தி.மு.க.வின் ஆண்டுக்கு ஒரு முறை சொத்து வரி உயர்வு அறிவிப்பின்மூலம் நகர்ப் புறங்களில் மேலும் வாடகை உயரும் சூழல் உருவாகும். இது மட்டுமல்லாமல், வணிக நோக்கத்தோடு கடைகள் மற்றும் நிறுவனங்களை வைத்திருப்பவர்களும் தங்கள் பொருட்களுக்கான விலையையும், சேவைகளுக்கான கட்டணத்தையும் உயர்த்தக்கூடும்.

AIADMK coordinator O Panneer Selvam has warned that there is a possibility of rising house rents in Tamil Nadu

சட்டத்தை திரும்ப பெற வேண்டும்

தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சொத்து வரி உயர்வு, சான்றிதழ் கட்டண உயர்வு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை சரியாக வழங்காமை, மக்கள் நலம் பயக்கும் திட்டங்களான அம்மா மினி கிளினிக்குகள், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அம்மா இருசக்கர மானியம் வழங்கும் திட்டம், பொங்கல் பரிசுத் தொகை ஆகியவற்றை நிறுத்துதல், அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்தல் என மக்கள் விரோதச் செயல்கள் தான் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்னும் என்னென்ன கட்டணங்களை இந்த அரசு உயர்த்தப் போகிறதோ என்ற பீதியில் மக்கள் உறைந்து போயிருக்கிறார்கள். எனவே, 'மக்கள் நலன்' என்று அடிக்கடி பேசும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருக்குமானால், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்) சட்டமுன்வடிவை திரும்பப் பெற தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

தனித்துப் போட்டியிட்டாலும் பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.. புதிய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட அண்ணாமலை

Follow Us:
Download App:
  • android
  • ios