Asianet News TamilAsianet News Tamil

அரசு அதிகாரிகளின் உயிருக்கே உத்தரவாதம் இல்லை...! நிர்வாக திறமையின்மையால் மோசமான நிலையில் தமிழகம்- ஓபிஎஸ்

தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளின் உயிருக்கே உத்தரவாதமில்லாத அவல நிலையை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

AIADMK co ordinator O Panneer Selvam has accused the law and order situation in Tamil Nadu of being bad
Author
Tamilnadu, First Published May 31, 2022, 8:32 AM IST

நாள் தோறும் வெட்டு குத்து

தமிழகத்தில் சட்டம் ஒழங்கு மோசமாகியுள்ள நிலையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சூதாட்டம், சாராயம், போதை, கடத்தல், பதுக்கல் ஆகியவற்றின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களோ 'திராவிட மாடல்' ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் நாள்தோறும், வெட்டுக் குத்து, கொலை, தற்கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்கள் தான் அதிகம் நடைபெற்று வருகின்றன. ஒருவேளை இதுதான் 'திராவிட மாடல்' போலும். நடு ரோட்டில் அரிவாளால் வெட்டுதல், பட்டப் பகலில் அரிவாளால் சரமாரியாகத் தாக்குதல் என்பதையெல்லாம் தாண்டி, அரசு அலுவலகத்திலேயே வெட்டுக் குத்துச் சம்பவம் தமிழ்நாட்டில் நேற்று அரங்கேறி இருக்கிறது என்றால், அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்திருக்கிறது. தேனி மாவட்டம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரியாக திருமதி ராஜ ராஜேஸ்வரி என்பவர் பணியாற்றி வருவதாகவும், அதே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இளநிலை உதவியாளர் திரு. உமாசங்கர் பல்வேறு ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டதன் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், தற்போது அவர் திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயில் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருவதாகவும், இளநிலை உதவியாளர் மீது துறைவாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதன் காரணமாக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும், 

AIADMK co ordinator O Panneer Selvam has accused the law and order situation in Tamil Nadu of being bad

அரசு அதிகாரிக்கு அரிவாள் வெட்டு

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளநிலை உதவியாளர் திட்ட அலுவலரின் அறைக்குச் சென்று மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக அவரை வெட்டியதாகவும், ரத்த வெள்ளத்தில் இருந்த திட்ட அலுவலர் திருமதி ராஜ ராஜேஸ்வரியை சக ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்ததாகவும், இதற்குக் காரணமான இளநிலை உதவியாளரை காவல் துறையிடம் ஒப்படைத்தாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதிலிருந்து, தி.மு.க. ஆட்சியில் ஒழுக்கமின்மை மேலோங்கி நிற்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தி.மு.க.வினருக்கு பயந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள் இனி சக ஊழியர்களுக்கும் அஞ்சி நடக்க வேண்டிய நிலை. தற்போது தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க.வினரின் தலையீடு பரவலாக இருப்பதும், அவர்களோடு சில அரசு ஊழியர்கள் கைகோர்த்து இருப்பதும்தான் இதுபோன்ற செயலுக்கு காரணம் என்று அரசு ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால், அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் நிலை உருவாகும். அரசு அலுவலகங்களுக்குள் செல்பவர்களை எல்லாம் பரிசோதனை செய்து அனுப்ப வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 

AIADMK co ordinator O Panneer Selvam has accused the law and order situation in Tamil Nadu of being bad

சட்டம் ஒழுங்கில் கவனம்

ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மைதான் இதுபோன்ற விபரீதங்களுக்கு காரணம். இது கடும் கண்டனத்திற்குரியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரசு அதிகாரி விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் பணியில் சேர வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மற்ற பிரச்சனைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் சட்டம் ஒழுங்கினை பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், திட்ட அதிகாரியை தாக்கிய இளநிலை உதவியாளர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios