துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தேனி,பெரியகுளம்,கம்பம் பகுதிகளில் புதிதுபுதிதாக முளைத்து வரும் ‘எட்ப்பாடியார்’ பேரவையால் எரிச்சல் அடைந்துள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சில இடங்களில் சரியாக எடப்பாடியார் முகத்தில் மட்டும் சாணி அடித்துவருவதால் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரில் 'எடப்பாடியார் பேரவை' என்று அச்சிடப்பட்ட போஸ்டர்கள் மாவட்டம் முழவதும் ஒட்டப்பட்டிருந்தது. கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டியன் என்பவர் இந்த போஸ்டரை அச்சிட்டிருந்ததார். இவர் கம்பம் அதிமுக எம்எல்ஏ ஜக்கையனின் ஆதரவாளர் என்று கூறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து பால்பாண்டியன் தனது ஆதரவாளர் கிடையாது, தர்மயுத்த காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக செயல்பட்டவர் என்று எம்எல்ஏ ஜக்கையன் விளக்கமளித்தார். மேலும் அரசியல் கட்சிகள் என்றாலே உட்கட்சி பூசல்கள் இருக்கத்தான் செய்யும் என்றும் கொளுத்திப்போட்டார். இந்நிலையில் கம்பம் எம்எல்ஏ ஜக்கையனின் அலுவலகத்தின் முன்பாக ஒட்டப்பட்டிருந்த எடப்பாடியார் பேரவை போஸ்டரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தின் மீது நேற்றிரவும் சிலர் சாணி அடித்துள்ளனர். 

மேலும் போஸ்டரில் இடம்பெற்ற தேனி மாவட்ட எடப்பாடி பேரவை என்ற வாக்கியம் மற்றும் போஸ்டர் அச்சிட்ட பால்பாண்டியன் படத்தின் மீதும் சாணியை பூசி சென்றுள்ளனர். இதனால் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. 

உடனடியாக சிலர் அந்த சுவரொட்டியை கிழித்தும் சேதப்படுத்தினர். இதன் காரணமாக கம்பம் எம்எல்ஏ அலுவலகத்தின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்ட்டுள்ளனர். மேலும் சுவரொட்டி மீது சாணி அடித்து சேதப்படுத்திய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். சாணி அடிக்கப்பட்ட போஸ்டரில் உள்ள துணை முதல்வரின் படத்தில் மட்டும் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.