முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிக விரைவில் மக்களால் நிராகரிக்கப்பட்டு முன்னாள் முதல்வராக இருப்பார் என்று பேசியிருக்கிறார் எம்பி மாணிக்கம் தாகூர். 

விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி. மாணிக்கம் தாகூர், “எடப்பாடி பழனிச்சாமி காபந்து முதலமைச்சர் போல் தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிக விரைவில் மக்களால் நிராகரிக்கப்பட்டு முன்னாள் முதல்வராக இருப்பார். தமிழகத்தில் நல்லாட்சி உருவாக வேண்டும். அந்த நல்லாட்சியில் தமிழகத்தின் வளர்ச்சியிலே உண்மையாக காங்கிரஸ் இருக்கும். ஊரடங்கு சமயத்தில் தமிழகத்தின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதில் சிறு தொழில்கள் மிகவும் பாதிக்கபட்டு உள்ளது. அதிமுக அரசு மோடி அரசுடன் துணை நின்று விவசாயிகளுடைய வாழ்விலே இடியை போல் மிகப்பெரிய அடியை கொடுத்திருக்கிறது. அதிமுக அரசு வரும் தேர்தலில் மிகப்பெரிய தோல்வி அடைவது நிச்சயம்.

திமுக- காங்கிரஸ் கூட்டணி அரசின் தோல்விகளை மக்களிடையே எடுத்துச் சொல்கிறது. அதிமுக உட்கட்சி பிரச்சனையை பெரிதாக்கியதால் தற்போது இருக்கிற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுகவில் கடைசி முதல்வராக இருக்க போகிறார். அதிமுகவின் முதல் முதல்வராக எம்ஜிஆரும் கடைசி முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும் இருப்பார் என்பது உறுதி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகர். ரஜினி அரசியலுக்கு வருவது என்பது மழை வரும் மழை வரும் என்று சொல்லிக் கொண்டிருப்பது போன்றது. பருவகால மழை கொஞ்சம் தள்ளிப் போகிறது. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதை பற்றி பேசாமல் அடுத்த படத்தை பற்றி பேசுவது நல்லது. மோடி ஆட்சியில் தமிழ் மொழி அவமானப்படுத்தப்படுகிறது. நீதித்துறையின் மீது இருந்த நம்பிக்கை முற்றிலும் சிதறடிக்கப்பட்டு உள்ளது. பாபர் மசூதி தீர்ப்பு மிகவும் வருத்தம் அளிக்க கூடியது” எனக் கூறினார்.