2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி பழனிசாமியை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் 28-ம் தேதி நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையை காரசாரமான விவாதம் நடைபெற்றது. சுமார் 5 மணிநேரம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

இதனால், கடந்த சில தினங்களாகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். குறிப்பாக நேற்று காலை முதல் அதிகாலை வரை மூத்த அமைச்சர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும் மாறி மாறி சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர். இதனால் ஆளும் அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு நிலவியது. ஒருவழியாக இருவருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதால் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதும், வழிகாட்டுதல் குழு குறித்தும் இன்று காலை அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில்,  ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். பின்னர், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அதிகாரப்பூர்வமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.