Asianet News TamilAsianet News Tamil

MGR Birth Anniversary : அள்ளிக் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்.. எம்.ஜி.ஆருக்கு இபிஎஸ் புகழாரம் !!

அள்ளி அள்ளிக் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர், கடைநிலை தொழிலாளியையும் மதிக்கும் பண்பாளர் தான் எங்கள் எம்.ஜி.ஆர் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

Aiadmk chief coordinator edappadi palanisamy about tweet in mgr 105th birth anniversary
Author
Tamilnadu, First Published Jan 17, 2022, 11:03 AM IST

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் இலங்கையில் கண்டி அருகேயுள்ள நாவலப்பிட்டியில் 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி பிறந்தார். தனது சிறுவயது முதற்கொண்டு நாடகத்தில் நடிக்கத் தொடங்கி, பின்னர் இத்துறையில் நல்ல அனுபவம் பெற்றுத் திரைத்துறைக்குச் சென்றார்.  1936-ம் ஆண்டு சதிலீலாவதி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து சிறிய வேடங்களில் நடித்து வந்தாலும், 1950-ம் ஆண்டு தலைவர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய 'மருதநாட்டு இளவரசி' மற்றும் 'மந்திரிகுமாரி' திரைப்படங்களின் வாயிலாகத் திரையுலகில் தனக்கென்று ஒரு தனியிடம் பெற்றதோடு, தொடர்ந்து 30 ஆண்டுகள் தமிழ்த் திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கினார் என்றால் அது மிகையாகாது.

Aiadmk chief coordinator edappadi palanisamy about tweet in mgr 105th birth anniversary

அவர் நடித்த பல படங்களுக்குத் தேசிய விருதுகளும், தமிழ்நாடு அரசின் சார்பில் அண்ணா விருதும் வழங்கி கவுரவப்படுத்தப்பட்டது. அண்ணாவால் ‘இதயக்கனி‘ என்றும், தலைவர் கருணாநிதியால் வழங்கப்பட்ட ‘புரட்சி நடிகர்’ என்கிற பட்டமே பின்னாளில் புரட்சித் தலைவர் என்று நிலை பெற்றது. அன்னாரின் அளப்பரிய மக்கள் சேவையினைப் பாராட்டி, அவரின் மறைவுக்குப் பின் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

தொடக்கத்தில் காந்தியவாதியாகத் திகழ்ந்தாலும், பெரியார், அண்ணா ஆகியோரின் திராவிடச் சிந்தனையாலும், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு, 1953-ம் ஆண்டு தன்னைத் திராவிட இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். தான் நடித்த திரைப்படங்களிலும் திராவிடக் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். 1962-ம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக, சிறுசேமிப்புத்திட்டத் துணைத்தலைவராக, 1967-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக, 1969-ல் தி.மு.க.வின் பொருளாளராக, பின்னாளில் அ.தி.மு.க. என்கிற தனி இயக்கம் கண்டு, 1972-ம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் பெற்ற வெற்றியினைத் தொடர்ந்து 1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக முதல்-அமைச்சர் ஆகப் பொறுப்பேற்றார். 

1977 முதல் 1987-ம் ஆண்டுவரை தொடர்ந்து 10 ஆண்டுகள் 3 முறை தமிழகத்தின் முதல்-அமைச்சராகப் பதவி வகித்தார். முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை, எளியோர் நலம் பெறுகின்ற வகையில், நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இந்த நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் 'அள்ளி அள்ளிக் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர், கடைநிலை தொழிலாளியையும் மதிக்கும் பண்பாளர், சரித்திர திட்டங்களால் தமிழகத்தின் தாயுமானவராய் வாழ்ந்து, கோடிக் கணக்கான இதயங்களில் அழியாப் புகழுடன் இதயதெய்வமாக வீற்றிருக்கும் எங்கள் புரட்சித்தலைவருக்கு 105 வது பிறந்தநாள் புகழ் வணக்கங்கள்' என்று கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios