பிரச்சாரத்திற்கு அதிமுக வேட்பாளர்களுக்கு பாமக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு புகார் சென்றுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கியதே கள்ளக்குறிச்சியில் இருந்து தான். அதாவது கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளரை ஆதரித்து தான் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து வேலூர் மத்திய சென்னை என்று கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதேபோல் பாஜக பாமக தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு அதிமுக தலைமையிடம் இருந்து சென்றுள்ளது. இதனால் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் எப்போதும் அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன் தான் சுற்றி வருகின்றனர். அமைச்சர்களும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் என்று பார்க்காமல் கட்சித் தலைமையின் கட்டளையை ஏற்று தேமுதிக பாமக பாஜக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். 

ஆனால் அதிமுக வேட்பாளர்கள் தான் கூட்டணிக் கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லாமல் தவித்து வருவதாக கூறுகிறார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டதோடு சரி எந்த அதிமுக வேட்பாளரை ஆதரித்து தற்போது வரை அவர் பிரச்சாரம் மேற்கொள்ள வில்லை. ஆனால் பாமக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். இதேபோல் அன்புமணியும் தர்மபுரி தொகுதியில் முடங்கியுள்ளார். தான் போட்டியிடும் தர்மபுரி தொகுதியை விட்டு அன்புமணி ராமதாஸ் வெளியே வரவில்லை. இதனால் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க பாமக தரப்பிலிருந்து வலுவான தலைவர்கள் யாரும் உடன் இருப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு எடப்பாடி பழனிசாமிக்கு சென்றுள்ளது.

 

இதேபோல் பிரச்சாரத்திற்கு வருவார் கேப்டன் என்று கூறித் தான் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக. தமிழகம் முழுவதும் 4 அல்லது 5 பொதுக்கூட்டங்களில் விஜயகாந்த் பங்கேற்பார் என்று அதிமுக தரப்பிடம் தேமுதிக உறுதியளித்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால் தற்போது வரை விஜயகாந்தின் பிரச்சார விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவார் என்று மட்டுமே கூறுகிறார்களே உரிய எப்போது என்கிற தகவலை தேமுதிக தரப்பு தெரிவிக்க மறுத்து வருகிறது. 

இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் திருச்சி விருதுநகர் வடசென்னை ஆகிய தொகுதிகளில் உள்ள தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். பிரச்சாரத்தை திருப்பூரிலிருந்து துவங்குவதாக கூறினாலும் அவர் அதிகம் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தும் வகையில் பயணத்திட்டம் தயாராகியுள்ளது. இந்தத் தகவல்களையெல்லாம் அதிமுக வேட்பாளர்கள் பலர் புகாராகவே எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து என்ன என்று கேட்குமாறு தங்கமணியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும் அவர் உடனடியாக தேமுதிக தரப்பில் தொடர்பு கொண்டேன் விஜயகாந்த் எப்போது பிரச்சாரத்திற்கு வருவார் என்று கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதேபோல் மத்திய சென்னையில் பாமக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி பாமக வேட்பாளர் இடம் நேரடியாகவே தனது அதிருப்தியை தெரிவித்ததாகவும் சொல்கிறார்கள். நான் உங்களுக்காக இப்படி பிரச்சாரம் செய்கிறேன் ஆனால் அய்யா தற்போது வரை அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யாமல் இருக்கிறார் என்று தனது ஆதங்கத்தை எடப்பாடி பாமக வேட்பாளர் சாம் பாலிடம் கூறியதாகவும் சொல்கிறார்கள்.