வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. 

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி. பழனிச்சாமி  டெல்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில், செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவில் யாருடைய கருத்தையும் கேட்காமல் அதிமுக விதிகள் திருத்தப்பட்டன. அதிமுக சட்ட விதி 43-இன்படி விதிகளைத் திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொதுச்செயலாளர் நியமனம் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படும். இதன்படி, தேர்தல் தொடர்பான வேட்பு மனு படிவத்தில் பொதுச்செயலாளர் மட்டுமே கையெழுத்திட முடியும். எனவே, மக்களவைத் தேர்தலில் வேட்பு மனு  படிவங்களில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திடுவதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும், அவர்கள் கையெழுத்திடும் வேட்பு மனுக்களை நிராகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஈஜரான வழக்கறிஞர் அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது, என்பதால் வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். 

இதனிடையே ஓ. பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் வேட்பு மனு படிவங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கையெழுத்திடுவதை இதுவரை யாரும் ஆட்சேபிக்கவில்லை என்றனர். இதுதொடர்பான வழக்கின் தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில் இபிஎஸ், ஓபிஎஸ கையெழுத்திட தடை விதிக்க மறுத்ததுடன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.