முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்திருந்தனர்.

எடப்பாடி அரசு பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளுநரிடம் கோரியிருந்தன. 

தமிழக பொறுப்பாளுநர் வித்யாசாகர் ராவ், டிடிவி தினகரனின் 19 ஆதரவு எம்எல்ஏக்களும் அதிமுகவிலேயே நீடிப்பதால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக கருத முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஒரே கட்சி இரு குழுக்களாக
செயல்படுவதால் சட்டப்படி தலையிட முடியாது ஆளுநர் கூறியுள்ளார்.

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலையில் உள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னையில் உள்ள தலைமை செயலகத்துக்கு நாளை வர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 21 எம்எல்ஏக்கள் செயல்பட்டு வரும் நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

எம்.எல்.ஏ.க்களை மாவட்ட வாரியாக நாளை சுமார் காலை 10 மணி முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, அதிமுகவின் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் தனித்தனியாக தொலைபேசி வாயிலாக அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக எம்.எல்.ஏ.க்களை மாவட்ட வாரியாக சந்தித்திருந்தார். தற்போது தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுவையில் தங்கியுள்ள டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை புறப்பட தயாராகி உள்ளனர்.