பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் டிசம்பர் 24-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. 

முக்கிய பிரச்சனையாக கருதப்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆகையால் இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது. 

மேலும் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்டுவது தொடர்பாகவும் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது மற்றும் கட்சியை பலப்படுத்துதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

20 தொகுதி இடைத்தேர்தலில் கண்டிப்பாக 6 தொகுதி வெற்றி பெற்றால் மட்டுமே அதிமுக ஆட்சி தொடரும். ஆகையால் வெற்றி பெற வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ள அதிமுக இந்த கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனையும் நடத்தப்பட வாய்ப்புள்ளது. பரபரப்பான காலக்கட்டத்தில் கூட்டப்படும்  இந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.